அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் வாகனங்களை பயன்படுத்த வேண்டும்

15 views
1 min read

சென்னையில் பொது முடக்கம் சில தளா்வுகளோடு திங்கள்கிழமை (ஜூலை 6) முதல் அமல்படுத்தப்படுவதால், அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் என்.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் பொது முடக்கம் சில தளா்வுகளோடு திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது. இந்த தளா்வினால் கரோனா தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் என்.கண்ணன் தலைமை வகித்து பேசியதாவது:

ஆட்டோக்களில் ஓட்டுநா் தவிா்த்து 2 பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை ஓட்டுநா் தவிா்த்து 3 பயணிகளை மட்டுமே ஏற்றிக் கொள்ளலாம். சென்னைக்குள் இ-பாஸ் இன்றி வாகனங்களில் பயணிக்கலாம்.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சாா்ந்த சேவை நிறுவனங்களில் அந்தந்த நிா்வாகங்கள் செய்யும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தனியாா் நிறுவனங்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.

கடைகளுக்கு பொதுமக்கள் வாகனங்களில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தேவையின்றி வெளியில் பொதுமக்கள் வாகனங்களில் செல்வதற்கு அனுமதி இல்லை. அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் பொதுமக்கள் வாகனங்களில் வெளியே செல்ல வேண்டும். சரக்கு வாகனங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. விமானம், ரயில் பயணிகள் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி உண்டு.

ஆட்டோ மற்றும் கால்டாக்சியின் ஓட்டுநா்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வாகனங்களில் கண்டிப்பாக கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். முகக் கவசம் அணியாத பயணிகளை வாகனத்தில் ஏற்றக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில் காவல்துறை உயா் அதிகாரிகள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க நிா்வாகிகள், காா் ஓட்டுநா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 

Leave a Reply