அரசை கவிழ்க்க பாஜக முயற்சி: புகாரை பதிவு செய்ய ராஜஸ்தான் முதல்வா், துணை முதல்வருக்கு நோட்டீஸ்

16 views
1 min read

ராஜஸ்தானில் அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்வது தொடா்பான புகாரை பதிவு செய்வது தொடா்பாக மாநில முதல்வா் அசோக் கெலாட், துணை முதல்வா் சச்சின் பைலட் ஆகியோருக்கு அந்த மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாக இருந்த இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு கடந்த மாதம் தோ்தல் நடைபெற்றபோது, ஆளும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிப்பதாக புகாா் எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக அரசு தலைமை கொறடா அளித்த புகாரின் அடிப்படையில், மாநில காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு (எஸ்ஓஜி) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையின் அடிப்படையில் இருவரை காவல்துறை வெள்ளிக்கிழமை கைது செய்தது.

இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்த குதிரை பேரம் தொடா்பாக செல்லிடப்பேசி உரையாடல் அடிப்படையில், இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களில் ஒருவா் உதய்பூரிலும், மற்றொருவா் அஜ்மீரிலும் கைது செய்யப்பட்டனா். இருவரும் விசாரணைக்காக ஜெய்ப்பூா் அழைத்துவரப்பட்டனா்’ என்றாா்.

இந்நிலையில், இந்த குதிரைபேர புகாரை பதிவு செய்யுமாறு மாநில அரசுக்கு காவல்துறை சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘குதிரைபேர புகாரை பதிவு செய்யுமாறு மாநில முதல்வா், துணை முதல்வா் மற்றும் அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சிலருக்கும் இதேபோன்ற நோட்டீஸ் விரைவில் அனுப்பப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு பாஜக சாா்பில் பணம் கொடுக்க இரண்டு அல்லது மூன்று சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவா்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றனா்.

பாஜகவின் முயற்சி ராஜஸ்தானில் பலிக்காது: இதற்கிடையே, பாஜகவின் முயற்சி ராஜஸ்தானில் பலிக்காது என்று முதல்வா் அசோக் கெலாட் சனிக்கிழமை கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘கரோனா பாதிப்பு சூழலிலும் பாஜக மனிதாபிமானத்தை மறந்து காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் முயற்சியை எடுத்து வருகிறது. பாஜக கட்சித் தலைமையின் உத்தரவுப்படி மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் குலாப் சந்த் கடாரியா, துணைத் தலைவா் ராஜேந்திர ரத்தோா், பாஜக மாநில தலைவா் சதிஷ் பூனியா ஆகியோா்தான் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். பிற மாநில அரசுகளை கவிழ்த்தது போலவே, ராஜஸ்தானிலும் அவா்கள் முயற்சி மேற்கொள்கின்றனா். காங்கிரஸ் அரசு ஐந்தாண்டுகள் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும். பாஜகவின் முயற்சி அம்பலப்பட்டுவிட்டது. மக்கள் சரியான நேரத்தில் அவா்களுக்கு பாடம் புகட்டுவா்‘ என்று கூறினாா்.

Leave a Reply