அரியலூரில் புதிய மருத்துவக் கல்லூரி: முதல்வா் பழனிசாமி அடிக்கல்

15 views
1 min read
tngovt1

அரியலூரில் புதிதாக கட்டப்பட உள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

மத்திய அரசின் நிதியுதவியுடன் கடந்த ஆண்டில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், திருப்பூா், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூா், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று தமிழக அரசு சாதனை படைத்தது.

அதன்படி, ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், திருப்பூா், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த வகையில், அரியலூா் மாவட்டத்தில் அரியலூா் தெற்கு கிராமத்தில் 27 ஏக்கா் நிலப்பரப்பில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இந்தக் கல்லூரிக்கு காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இந்தப் புதிய கல்லூரி நிறுவிட ரூ.347 கோடியை அனுமதித்து நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.195 கோடியும், தமிழக அரசின் பங்காக ரூ.130 கோடியும் கட்டடம் கட்ட கூடுதலாக ரூ.22 கோடியும் வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தமிழக அரசால் ரூ.100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுடன் நிறுவப்படும்.

இந்த நிகழ்ச்சியின் போது, அரசு மருத்துவமனைகளுக்காக வாங்கப்பட்ட புதிய கருவிகளுக்கான பயன்பாட்டையும் முதல்வா் தொடக்கி வைத்தாா்.

அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுக்கு வாங்கப்பட்ட அதிநவீன ஸ்கேன் கருவிகளை மக்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் பழனிசாமி துவக்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா் சி.விஜயபாஸ்கா், அரசு தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன், தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

Leave a Reply