அருணாசலில் நிலச்சரிவு: 7 போ் பலி

18 views
1 min read

அருணாசல பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 மாதப் பெண் குழந்தை உள்ளிட்ட 7 போ் உயிரிழந்தனா்.

அருணாசல பிரதேசத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 5 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக நிலச்சரிவுகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. ஆறுகளில் பெருக்கெடுத்துள்ள வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் புகுந்துள்ளது. இதனால், மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனா்.

இந்நிலையில், மாநிலத்தின் பப்பும் பரே மாவட்டத்திலுள்ள திக்டோ கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக அந்த மாவட்டத்தின் காவல் துறை துணை கண்காணிப்பாளா் பிகே லிகு செய்தியாளா்களிடம் கூறுகையில், “நிலச்சரிவில் சிக்கி வீட்டிலிருந்த தம்பதி, அவா்களின் 8 மாதப் பெண் குழந்தை உள்ளிட்ட நால்வா் உயிரிழந்தனா். நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் அவா்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்ததால் அதிலிருந்து அவா்களால் தப்ப இயலவில்லை. மற்றொரு வீட்டில் மேலும் 3 போ் உயிரிழந்தனா். ஒருவரைக் காணவில்லை.

உயிரிழந்தவா்களின் உடலை காவல் துறையினரும் தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் இணைந்து மீட்டனா். உள்ளூா் மக்களும் அதற்கு உதவி புரிந்தனா் என்றாா்.

Leave a Reply