அறுவடைக்குத் தயாராக இருந்த 500 ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்

20 views
1 min read
cats

 

வெம்பாக்கம் வட்டாரத்தில் தொடர்ந்து 4 நாட்களாகத் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்து வந்த சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.  

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் நாட்டேரி, சித்தனைக்கால், வடஇலுப்பை, சிறுநாவல்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் சொர்ணவாரி பட்டத்தில் ஏடிடீ.56, குண்டு, கோ.51 போன்ற நெற்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர். பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் நன்றாக வளர்த்து முற்றிய நெற்கதிர்களுடன் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்து வந்தன.

இந்நிலையில், வெம்பாக்கம் வட்டாரத்தில் ஜூலை.9 -ம் தேதி 9 எம்.எம், 10 ம்தேதி 50 எம்.எம், 11 ம் தேதி 67 எம்.எம் என்கின்ற அளவில் கனமழை பெய்து பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, ஏரி நீர்வரத்து கால்வாய், பாசனக்கால்வாய் மற்றும் உபரிநீர் செல்லும் கால்வாய்கள் போன்றவை பெரும்பாலான இடங்களில் பலர் ஆக்கிரமித்து இருந்த காரணத்தாலும், சில பகுதிகளில் கால்வாய்கள் ஆழம் இல்லாமலும், சில இடங்களில் தூர் வாரப்படாதக் காரணத்தால், பெய்த மழைநீர் வெளியேற முடியாமல் நிலத்துப் பகுதியிலேயே தங்கிவிட்டதாகத் தெரிகிறது. அதன் காரணமாக பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்து வந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முளைத்து நிலத்திலேயே பாழாகி வருகின்றன. 

விவசாயிகள் வேதனை:

நீர்வரத்து கால்வாய், பாசனக்கால்வாய் மற்றும் உபரிநீர் செல்லும் கால்வாய்கள் போன்றவை பெரும்பாலான இடங்களில் செய்யப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், சில பகுதிகளில் ஆழம் இல்லாமல் காணப்படும் கால்வாய்களை தூர்வாரி ஆழப்படுத்தி விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என்று பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி ஆகிய துறைகளுக்கு விவசாயிகள் சார்பில் பல முறை மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமலும், தகுந்த பதிலளிக்காமலும், துறைமாற்றி, துறைக்கு மனு அளியுங்கள் என்று பதிலைத் தெரிவித்து விவசாயிகளை அலைக்கழித்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

ஒவ்வொரு விவசாயியும் ஒரு ஏக்கரில் நெற்பயிர் பயிர் செய்ய விதைப்பு முதல் அறுவடை வரையில் ஏக்கருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரையில் செலவு செய்ய வேண்டியுள்ளனர். செலவுக்கான பணத்தை வீட்டில் உள்ள நகைகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்களை அடகு வைத்து விவசாயத்தில் ஈடுபட வேண்டியுள்ளது என்று மேலும் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர். 

TAGS
farmers

Leave a Reply