அவிநாசி அருகே கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்தொட்டி கண்டுபிடிப்பு

18 views
1 min read
av

அவிநாசி அருகே இராமநாதபுரம் கிராமத்தில் கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், கருவலூர் அருகே இராமநாதபுரம் கிராமத்தில் வரலாற்றுச் சுவடுகள் ஆய்வு மையத்தைச் சார்ந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இதில் கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஆய்வாளர்கள் முடியரசு, சிவக்குமார் ஆகியோர் கூறியது: கொங்கு மண்டலமானது கால்நடை மேய்த்தல் தொழிலை முக்கியமான தொழிலாகக் கொண்டது. சாலைகளில் செல்லும் மாட்டுவண்டிகள், சுமை சுமந்து செல்லும் கழுதைகள், தலைமூட்டையுடன் செல்லும் பாதசாரிகள் உள்ளிட்ட பயணிகள் இளைப்பாற பெரிய நிழல்தரும் மரங்கள், சாலையோரக் கிணறுகள், சுமைதாங்கிக் கற்கள் கொங்கு மண்டல கிராமங்களில் காணப்படும். 

பட்டி போட்டு மேய்க்கும் குரும்பை ஆடுகள், காடுகளில் மேய்க்கும் வெள்ளாடுகள், கால்நடைகள் உள்ளிட்ட பலவகையான கால்நடை இனங்களுக்கும் தாகம் தணிக்க கிராமச் சாலையோரப் பொதுக் கிணறுகளின் அருகில் நம் முன்னோர்கள் கல்தொட்டி அமைத்து கால்நடைகளின் தாகம் தீர்க்க ஜீவ காருண்ய சேவை புரிந்துள்ளனர். சேந்து கிணற்றில் நீரைச் சால் அல்லது குடங்களில் மொண்டு கல்தொட்டி நிரப்பப்பட்டு கால்நடைகளுக்குப் பருக வழங்கப்படும். இத்தகைய கல்வெட்டுடன் கூடிய கல்தொட்டியே இராமநாதபுரத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஆரம்பிக்கும் பிரமாதி ஆண்டு என்பது 1760,1820, 1880 ,1940 எனும் ஆண்டுகளைக் குறிப்பதாகும். கல்வெட்டின் எழுத்தமைதி மற்றும் தேதி குறிப்பிட்ட முறை கொண்டு 1820 என யூகிக்கப் பெருமளவு வாய்ப்புகள் உண்டு. 

கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் பழமையானது எனக் கொள்ளலாம்.  ‘பிரமாதி ஆண்டு ஆடி இருபதாம் தேதி பண்டிதர் மகன் இராமராயன் அவர்களால் உள்ளூரிலே நஞ்சப்ப கவுண்டர் மகன் வேலாயுதக் கவுண்டர் வாசல் கிணற்றுச் சாலக் கிரையச் சாசனம். இது அனைத்து சாதியினரும் கூடிச் செய்தது.செல்லப்பம் பாளையத்தாருக்கும் செலந்தம் அதாவது தண்ணீர் சேரும். முறியாண்டாம் பாளையம் மொண்டிபாளையம் பகுதியினரும் உடன்பட மொண்டிபாளையம் தனம் கவுண்டர் வசம் அதாவது முன்னிலையில் மேற்படியார் சொன்னபடி வெட்டின கிணறு ‘என்பது இக் கல்வெட்டின் விளக்கமாகும். சில சொற்கள் சிதைந்து காணப்படுகிறது. இக் கல்தொட்டியானது 7 அடி நீளமும் 2 அடி அகலமும் ஒன்னே முக்காலடி உயரமும் கொண்டது.

இது ஒரு டன் எடைக்கும் அதிகமாக உள்ளது. பக்கவாட்டில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டு மற்றும் கல்தொட்டி குறித்து தொல்லியல் வரலாற்று அறிஞர் பூங்குன்றன் கூறுகையில், நாயக்கர்கள் ஆட்சிக்குப் பிறகு அதாவது இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்தொட்டிகள் அமைக்கும் பழக்கம் வந்திருக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் இக் கல்தொட்டிகள் கல்லுப் பண்ணைகள் என்றழைக்கப்பட்டன என்றார். வீரக் கல், சதிக் கல், அரிகண்டம், நவ கண்டம் போன்ற வீரம் செறிந்த நிகழ்வுகளைக் கடந்து சுமைதாங்கிக் கல், அன்னசத்திரம், கால்நடைகளுக்குத் தாகம் தீர்க்கும் கல்தொட்டி, ஊர்ப் பொதுக் கிணறு போன்ற மனித நேயமிக்க செயல்களைப் பிற்காலக் கொங்கு வரலாற்றில் அறியமுடிகிறது என வரலாற்று ஆய்வாளர் முடியரசு கூறினார்.
 

TAGS
Avinashi

Leave a Reply