ஆட்சியரகத்தில் மனு கொடுக்க 70 கி.மீ. சைக்கிளில் வந்த மாற்றுத்திறனாளி

18 views
1 min read
thanjai

70 கி.மீ. சைக்கிளில் வந்த மாற்றுத்திறனாளி

 

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுப்பதற்காக ஏறத்தாழ 70 கி.மீ. திங்கள்கிழமை சைக்கிளில் வந்தார் 73 வயதுடைய மாற்றுத்திறனாளி. 

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பகுதி ஏனாநல்லூரைச் சேர்ந்தவர் எஸ். நடேசன் (73). மாற்றுத் திறனாளியான இவருக்கு இடது கால் ஊனமாக இருக்கிறது. இவர் மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை பெறுவதற்காக ஏனாநல்லூரிலிருந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு ஏறத்தாழ 70 கி.மீ. சைக்கிளில் திங்கள்கிழமை வந்தார். சைக்கிளில் காற்றடிக்கும் பம்பும் வைத்திருந்தார். டயரில் காற்று குறைந்துவிட்டால் உடனடியாக அடித்துக் கொள்ளலாம் என்பதற்காக பம்பும் கொண்டு வந்ததாக நடேசன் தெரிவித்தார்.

இந்த முதிர்ந்த வயதில் இடது கால் ஊனமாக உள்ள நிலையில் 70 கி.மீ. சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்த அவரை ஆட்சியரகத்தில் இருந்த எல்லோரும் பரிதாபமாக பார்த்தனர். 

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது:

எனது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது மகனுடன் வசித்து வருகிறேன். மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டைப் பெறுவதற்காக கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மனு அளித்தேன். அதற்கு பதில் கிடைக்கவில்லை. 

எனவே ஆட்சியரகத்தில் மனு கொடுப்பதற்காக சைக்கிளில் வந்தேன். பேருந்து இல்லாததால் சைக்கிளில் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக ஏனாநல்லூரிலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டேன். ஆட்சியரகத்துக்கு வருவதற்கு முற்பகல் 11 மணி ஆகிவிட்டது. இடையில் எங்கும் நிற்கவில்லை.

ஆனால், மனுவை பெற்ற அலுவலர் எலும்பு முறிவு மருத்துவரிடம் சான்று பெற்று வருமாறு கூறினார். எனவே மீண்டும் சைக்கிளிலேயே ஊருக்குச் செல்கிறேன் என்றார் நடேசன்.

TAGS
petition

Leave a Reply