ஆட்டத்தின் முதல் பந்தை எதிர்கொள்ள சச்சின் மறுத்தது ஏன்?: கங்குலி தெரிவித்த ருசிகரத் தகவல்கள்

17 views
1 min read
sachin_ganguly11

 

சச்சினுடன் தொடக்க வீரராக விளையாடியபோது ஆட்டத்தின் முதல் பந்தை எதிர்கொண்டது குறித்து ருசிகரத் தகவல்களைத் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரரும் பிசிசிஐ தலைவருமான கங்குலி.

பிசிசிஐ.டிவி-க்காக கங்குலியைப் பேட்டி கண்டார் இந்திய வீரர் மயங்க் அகர்வால். அப்போது சச்சினுடன் தொடக்க வீரராக விளையாடியபோது ஆட்டத்தின் முதல் பந்தை எதிர்கொள்ள உங்களை சச்சின் வற்புறுத்துவாரா எனக் மயங்க் அகர்வால் கேள்வி எழுப்பினார். அதற்கு கங்குலி பதில் அளித்ததாவது:

ஆமாம். எப்போதும் என்னையே முதல் பந்தை எதிர்கொள்ளச் சொல்வார். சிலசமயங்களில் நீங்களும் முதல் பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்று சச்சினிடம் நான் கூறுவேன். இதற்கு இரு விதமான பதில்களை வைத்திருப்பார் சச்சின்.

நல்ல ஃபார்மில் இருக்கும்போது முதல் பந்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக எதிர்முனையில் இருக்கவேண்டும் என நினைப்பார் சச்சின். அதேபோல ஃபார்மில் இல்லாதபோதும் எதிர்முனையில் இருக்கவே விருப்பப்படுவார். அதற்கு அவர் கூறிய காரணம் – நல்ல ஃபார்மில் இல்லாதபோது எதிர்முனையில் இருந்தால் அழுத்தம் இருக்காது! நல்ல ஃபார்ம், மோசமான ஃபார்ம் என இரண்டுக்கும் அவரிடம் பதில் இருக்கும்.

சிலசமயங்களில் அவர் முதல் பந்தை எதிர்கொண்டுள்ளார். எப்படித் தெரியுமா? மைதானத்தில் களமிறங்கியவுடன் நேராக எதிர்முனைக்குச் சென்று நான் நின்றுவிடுவேன். சச்சினை ஏற்கெனவே தொலைக்காட்சியில் காண்பித்துவிடுவதால் வேறு வழியின்றி அவர் முதல் பந்தை எதிர்கொள்வார். இதுபோல ஒன்றிரண்டு முறை நடந்துள்ளது என்றார். 

1996 முதல் 2007 வரை சச்சினும் கங்குலியும் இணைந்து 136 இன்னிங்ஸில் 6609 ரன்கள் எடுத்துள்ளார்கள். இந்தக் கூட்டணி 21 முறை 100 ரன்களுக்கு அதிகமாகவும் 23 முறை 50 ரன்களுக்கு அதிகமாகவும் ஒருநாள் ஆட்டங்களில் எடுத்துள்ளது.

Leave a Reply