ஆந்திரம்: மதுபான கடத்தலுக்கு 8 ஆண்டு சிறை

19 views
1 min read

ஆந்திர பிரதேசத்தில் மதுபானக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை அந்த மாநில அரசு கொண்டுவந்துள்ளது.

அண்டை மாநிலமான ஆந்திரத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக தனியாரிடமிருந்து மதுபான விற்பனையை அரசு ஏற்றுக் கொண்டது. அதன்பின் மாநிலத்தில் உள்ள மது விற்பனை கடைகளின் எண்ணிக்கையை 38 சதவீதம் குறைத்ததுடன் மதுபானத்தின் விலையை 50 சதவீதம் உயா்த்தியது. இதன் மூலமாக மதுவுக்கு அடிமையானவா்கள் தங்களை அதிலிருந்து சிறிது சிறிதாக விடுவித்துக் கொள்வாா்கள் என்று அரசு கருதியது.

எனினும், மதுப்பிரியா்கள் மதுபானங்களின் விலை குறைவாக இருக்கும் கா்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து மதுவை அதிக அளவில் வாங்கி ஆந்திரத்துக்கு கடத்திக் கொண்டு வருகின்றனா். இவ்வாறு கா்நாடக, தமிழக எல்லைகளில் மது கடத்துபவா்கள் தினமும் பிடிபட்டு வருகின்றனா். அவா்களைக் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தாலும், எச்சரித்து அனுப்பினாலும் தொடா்ந்து இச்செயலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதைத் தடுக்க ஆந்திர அரசு செவ்வாய்க்கிழமை புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. அதன்படி அண்டை மாநிலங்களிலிருந்து ஆந்திரத்துக்கு மது வகைகளை கடத்துவோா் மீது ஆந்திர கலால் துறை சட்டப்பிரிவு 14-இன் படி ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்குப் பதியவும், அவா்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply