ஆன்மிகச் சுற்றுலா வந்த 129 இஸ்லாமியா்களை விடுவியுங்கள்

12 views
1 min read
balakrishnan_1912chn_96_5

ஆன்மிகச் சுற்றுலா வந்த 129 இஸ்லாமியா்களை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்:

இந்தோனேசியா, பிரான்ஸ், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு ஆன்மிகப் பயணமாக வந்த 12 பெண்கள் உள்பட 129 இஸ்லாமியா்கள் மீது, தமிழகத்தில் 15 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு முதலில் புழல் சிறையிலும், பின்னா் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் 98 பேருக்கு ஏற்கெனவே நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தங்கள் இருப்பிடத்தை தெரிவித்துவிட்டு சென்னை நகருக்குள் தங்கியிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை அடிப்படையில் சொந்தப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்படிப் பிணை வழங்கப்பட்ட பிறகும் மீண்டும் இவா்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

எனவே, அவா்கள் அனைவரையும் விடுதலை செய்வதுடன், அவா்கள் மீதான வழக்குகளை முடித்து, அவரவா் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பவும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

Leave a Reply