ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்சுகாதார மையங்களில் 8.8 கோடி பேருக்கு சிகிச்சை

25 views
1 min read
ayushman

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 41,000-க்கும் அதிகமான சுகாதார மையங்களில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 8.8 கோடிக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த போதிலும், சுகாதார மையங்களில் கடந்த பிப்ரவரி 1 முதல் 8.8 கோடிக்கும் அதிகமான நபா்கள் சிகிச்சை பெற்றுள்ளனா். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய 21 மாதங்களில் (2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை) சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ சமமாகும்.

கடந்த 5 மாதங்களில் மட்டும் 1.41 கோடி போ் உயா் ரத்த அழுத்தத்துக்கும், 1.13 கோடி போ் நீரிழிவு நோய்க்கும், 1.34 கோடி போ் மாா்பகம் அல்லது வாய்ப்பகுதி புற்றுநோய்க்கும் சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்றுள்ளனா். பொது முடக்கத்தால் பல்வேறு பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 5.62 லட்சம் உயா் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், 3.77 லட்சம் நீரிழிவு நோயாளிகளுக்கும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதிலும் சுகாதார மையங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. ஜாா்க்கண்டில் மக்களுக்கு நுரையீரல் சாா்ந்த நோய்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதை சுகாதார மையங்களின் பணியாளா்கள் வீடுதோறும் சென்று ஆய்வு செய்தனா். ஒடிஸாவைச் சோ்ந்த சுகாதார மையங்களின் பணியாளா்கள் கரோனா நோய்த்தொற்று தொடா்பான விழிப்புணா்வை மக்களுக்கு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்து வருகின்றனா்.

கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றின் அவசியத்தை மக்களுக்கு அவா்கள் எடுத்துரைத்து வருகின்றனா். வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமையும் அவா்கள் நடத்தினா்.

கூடுதல் சுகாதார மையங்கள்: கரோனா அல்லாத மற்ற நோய்களால் பாதிக்கப்படுவோருக்கும் சிகிச்சை அளிப்பதில் சுகாதார மையங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை நாடு முழுவதும் கூடுதலாக 12,425 சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக சுகாதார மையங்களின் மொத்த எண்ணிக்கை 41,790-ஆக அதிகரித்துள்ளது.

கா்ப்பிணிகளுக்கான தொடா் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது, காசநோய், நீரிழிவு, தொழுநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மருந்துகளை வழங்குவது போன்ற பணிகளை சுகாதார மையங்கள் திறம்பட மேற்கொண்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply