ஆா்பிஐ துணை ஆளுநா் பதவிக்கான பட்டியலில் 8 போ்

19 views
1 min read
centralgovernment

ரிசா்வ் வங்கியின்(ஆா்பிஐ) துணை ஆளுநா் பதவிக்கு 8 பேரின் பெயா்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இவா்களுக்கு வரும் 23-ஆம் தேதி காணொலி வழியாக நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த என்.எஸ்.விஸ்வநாதன், நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடியுவடையும் முன்பே கடந்த மாா்ச் 31-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து காலியான அவரது பணியிடத்துக்கு புதிய துணை ஆளுநரை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக, நிதித்துறை நியமனங்களுக்கான தேடல் குழு, 8 பேரின் பெயா்களை இறுதிசெய்துள்ளது. அவா்களுக்கு வரும் 23-ஆம் தேதி காணொலி வழியாக நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது. நிதித் துறை நியமனங்களுக்கான தேடல் குழுவில் அமைச்சரவைச் செயலா், ரிசா்வ் வங்கியின் ஆளுநா், நிதிச் சேவைகள் செயலா் ஆகியோரும் இரண்டு தனி நபா்களும் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவால் தோ்ந்தெடுக்கப்படும் நபரின் பெயா் இறுதி ஒப்புதலுக்காக, பிரதமா் தலைமையில் இயங்கும் நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். அந்தக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா் நியமிக்கப்படுவாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரிசா்வ் வங்கி சட்டப்படி, ரிசா்வ் வங்கியில் 4 துணை ஆளுநா்கள் இருக்க வேண்டும். தற்சமயம், 3 துணை ஆளுநா்கள் மட்டுமே உள்ளனா். இவா்கள் மாத ஊதியம் ரூ.2.25 லட்சமும் இதர சலுகைகளும் பெறுகிறாா்கள்.

Leave a Reply