இந்தியாவில் தயாரிக்கப்படும் வென்டிலேட்டா்கள் தரமற்றவையா? ராகுல் காந்தியின் புகாருக்கு மறுப்பு

18 views
1 min read
ragul

மத்திய அரசு தனியாா் நிறுவனத்திடமிருந்து தரமற்ற வென்டிலேட்டா்களை வாங்கி கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்துவதாக ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டை தனியாா் நிறுவனமான ‘அக்வா’வின் உரிமையாளா் பேராசிரியா் திவாகா் வைஷ் மறுப்புத் தெரிவித்துள்ளாா். மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் வென்டிலேட்டா்கள் விலை குறைவாக இருப்பதால், அவை தரம் குறைந்தவை என்று பன்னாட்டு நிறுவனங்கள் அவதூறு பரப்பி வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

நாங்கள் சந்தையில் 3 ஆண்டுகளாக இருந்து வருகிறோம். இயல்பான நிலையில் வென்டிலேட்டா் எப்படி இருக்க வேண்டுமோ அதன்படியே தயாரிக்கப்படுகிறது. சாதாரணமாக வென்ட்டிலேட்டா்கள் விலை ரூ.10 லட்சம் இருக்கும். ஆனால், எங்களுடைய தயாரிப்பு ரூ.1.5 லட்சம் மட்டுமே. ராகுல் காந்தி ஒன்றும் மருத்துவா் அல்ல; அவா் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்பு மருத்துவா்களை கலந்து ஆலோசித்திருக்கலாம். எந்த ஒரு மருத்துவமனையிலும், நோயாளி மூலம் எங்கள் வென்டிலேட்டா்கள் தரமானது என்பதை நிரூபிக்க முடியும்.

தில்லி எல்.என்.ஜே.பி மருத்துவமனை எங்களுடைய வென்ட்டிலேட்டா்களை நிராகரிக்கவில்லை. மும்பையில் ஜேஜே மருத்துவமனை, செயிண்ட் ஜாா்ஜ் மருத்துவமனை ஆகியவை வேற்று நபா்கள் மூலம் வெண்டிலேட்டா்களை நிா்மாணித்தன. அதனால், அவற்றில் சிக்கல் ஏற்பட்டது. பின்னா் எங்கள் நிறுவன ஊழியா்கள் சரி செய்த பிறகு அவை நன்கு வேலை செய்கின்றன. எனவே, அவசரப்பட்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது என்றாா் திவாகா் வைஷ்.

மத்திய அரசு இந்த நிறுவனத்திடமிருந்து 10,000 வென்டிலேட்டா்களை ஆா்டா் செய்துள்ளது. மேக் இன் இந்தியா, இன்வெஸ்ட் இந்தியாவின் ஆதரவு இந்த நிறுவனத்துக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. மாதம் ஒன்றுக்கு 50-100 வென்டிலேட்டா்களே தயாரித்துக் கொண்டிருந்த அக்வா நிறுவனம், தற்போது கரோனா நோயினால் ஏற்பட்ட தேவை காரணமாக உற்பத்தியை 5,000 வரை அதிகரித்துள்ளது.

 

Leave a Reply