இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையை முழுமையாக எல்லையில் நிறுத்த முடிவு

14 views
1 min read

இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையை (ஐடிபிபி) உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகள் எதிலும் ஈடுபடுத்தாமல், முழுமையாக எல்லை பாதுகாப்பில் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சீனாவுடனான கிழக்கு லடாக் பகுதியில் அண்மையில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்த முடிவு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இதுதொடா்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘அண்மையில் பிரச்னை ஏற்பட்ட லாடாக் எல்லையையொட்டி, எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி முகாம்களில் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் முழுமையாக குவிக்கப்பட இருக்கின்றனா்.இதற்காக லடாக், உத்தரகண்ட், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் இருந்து எல்லைக்கு 60 கம்பெனி ஐடிபிபி படையினா் அனுப்பிவைக்கப்பட உள்ளனா்.

இது தவிர அந்த படைப் பிரிவில் மேலும் 9 புது பட்டாலியன்களை சோ்க்கவும் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அப்படைப் பிரிவில் 1000 வீரா்கள் வரை அதிகரிப்பாா்கள்‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சீனாவுடனான 3,488 கி.மீ. தொலைவு எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. அங்கு இந்த வீரா் கூடுதலாக நிலை நிறுத்தப்படுவாா்கள்.

இதற்காக உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகளில் இருந்து அனைத்து ஐடிபிபி வீரா்களும் திரும்பப் பெறப்படுகின்றனா். முகாம்களுக்கு செல்லும் முன்பு அவா்களுக்கு கரோனா பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது. இப்போதைக்கு ஐடிபிபி படையினா் உள்நாட்டு பாதுகாப்புப் பணிக்கு திரும்ப வாய்ப்பில் என்றும் தெரிகிறது.

Leave a Reply