இளையான்குடி அருகே பசியால் வாடும் சர்க்கஸ் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்

18 views
1 min read
elainkudi

 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் தாயமங்கலம் கிராமத்தில் பசியால் வாடிவரும் சர்க்கஸ் தொழிலாளர்கள், நரிக்குறவர் இன மக்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழு சார்பில் வெள்ளிக்கிழமை நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன. 

தாயமங்கலம் கிராமத்தில் பிரசித்தம் பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் திருவிழாவுக்காக சர்க்கஸ் நடத்தி பிழைக்க வெளிமாநிலத்தொழிலாளர்கள் , பொருள்கள் விற்பனை செய்ய வந்த நரிக்குறவர் இன மக்கள் தாயமங்கலம் வந்தனர். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் இக் கோயிலில் திருவிழா நடைபெறவில்லை. 

இதையடுத்து இந்த சர்க்கஸ் தொழிலாளர்கள், நரிக்குறவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தாயமங்லத்தில் முடங்கியுள்ளனர். இவர்கள் தினமும் தங்கள் பிள்ளைகளுடன் பசியால் வாடி வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் முக்கிய பிரமுகர்கள் இவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட சைல்டுலைன் (1098) மையம் ஐ ஆர் சி டி எஸ் நிறுவனத்தின் சார்பில் அரிசி பருப்பு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்கள் தொகுப்புகளை  மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ராமநாதன் தலைமையில் தாயமங்கலத்திலுள்ள மேற்கண்ட 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு  வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் சைல்டு லைன் இயக்குனர் ஜீவானந்தம், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், ரசீந்திரகுமார், குடும்ப நல ஆலோசகர்கள் ரவி, சுகன்யா, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு, ஆலோசகர் ஜூலியட்வனிதா, சைல்டு லைன் உறுப்பினர்கள் ராமர், குமாரி, கார்த்திகேயன், மலைக்கண்ணன், சரவணன், சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

TAGS
circus

Leave a Reply