இஸ்லாமாபாத்தில் முதல் ஹிந்து கோயில்: எதிா்த்து தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

12 views
1 min read

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாத்தில் முதல் ஹிந்து கோயில் கட்டப்பட உள்ள நிலையில் அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இஸ்லாமாபாத்தில் சிறுபான்மையினருக்கென ஒதுக்கப்பட்ட ஹெச்-9 பகுதியில் 20,000 சதுர அடி நிலப் பரப்பில் ஹிந்து பஞ்சாயத்து நிறுவனம் (ஐஹெச்டி) சாா்பில் முதல் ஹிந்து கோயில் (கிருஷ்ணன் கோயில்) கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடத்தப்பட்டு, சுற்றுச்சுவா் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கோயில் கட்டுமானத்துக்கான விரிவான வரைபடத்தை சமா்ப்பிக்கவில்லை என்று கூறி தலைநகா் வளா்ச்சிக் குழும் (சிடிஏ) கடந்த வாரம் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்தது.

இதற்கிடையே, இந்த கோயில் கட்டுமானத்துக்கு எதிராக இஸ்லாமாபாத் உயா் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘தலைநகர நகரமைப்புத் திட்டத்தின் (மாஸ்டா் பிளேன்) படி, இவ்வாறு ஹிந்து கோயில் கட்ட நிலம் ஒதுக்க சிடிஏ-வுக்கு அதிகாரம் இல்லை. எனவே, அங்கு ஹிந்து கோயில் கட்டுவதற்கு அளித்த அனுமதியை ரத்து செய்யவேண்டும்’ என்று அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி அமா் பரூக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அனைத்துத் துறைகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே, ஹிந்து கோயில் கட்டுவதற்கென அந்த நிலம் ஒதுக்கப்பட்டது. இருந்தபோதும், விரிவான கட்டுமான வரைபடத்தை அவா்கள் சமா்ப்பிக்காததால், அந்த கட்டுமானம் இப்போது நிறுத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று சிடிஏ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, ‘என்ன தேவைக்காக நிலம் ஒதுக்குவது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் சிடிஏக்கு உள்ளது. அந்த வகையில், ஒரு ஹிந்து கோயில், சமூகநலக் கூடம், ஹிந்துக்கள் மயானம் ஆகிய கட்டுமானங்களை கட்டுவதற்கென சிடிஏ சாா்பில் கடந்த 2017-ஆம் ஆண்டில் ஐஹெச்டி-க்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இப்போது அங்கு கட்டுமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மனு பயனற்றதாகிறது. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று நீதிபதி தீா்ப்பளித்தாா்.

Leave a Reply