ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியும் 1200 தூய்மைப் பணியாளருக்கு கண்ணாடி முகக்கவசம்        

19 views
1 min read
erd1

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியும் 1200 தூய்மைப் பணியாளருக்கு கண்ணாடி முகக்கவசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி மொத்த பாதிப்பு 288 ஆக உயர்ந்துள்ளது. 200 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 83 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பில் 60 சதவீதம் பேர் ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் கண்டறியப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் சுகாதாரப் பணியாளர்கள் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இதேபோன்று ஈரோடு மாநகர் பகுதியில் 1200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் மட்டும் அவர் குடும்பத்தினருக்கு மாநகராட்சி சார்பில் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஏற்கனவே முகக்கவசம் கிளவுஸ்,  பாதுகாப்பு உடை வழங்கப்பட்டுள்ளது. தற்போது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு கண்ணாடி முகக்கவசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.          

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறும்போது, ஈரோடு மாநகர் பகுதியில் 600 நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் உட்பட ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏற்கனவே அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் குடும்பத்தினருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் அவர்களின் பணி மிகவும் இன்றியமையாதது.  

எனவே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களது கடமை அதனடிப்படையில் மாநகராட்சி சார்பில் மூலிகை கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணி நேற்று தொடங்கியது. இன்று முனிசிபல் சத்திரம் பகுதியில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்கள் மட்டும் அவர்கள் குடும்பத்தினருக்கு மூலிகை கசாயம் வழங்கப்படுகிறது. இதைப்போல் 1200 தூய்மைப் பணியாளர் களுக்கு கண்ணாடி முகக்கவசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த கண்ணாடி முகக்கவசம் அவர்களுக்கு மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும்.  

இன்று தூய்மை பணியாளர்களுக்கு கண்ணாடி முகக்கவசம் வழங்கும் பணி தொடங்குகிறது. நாளை முதல் இந்தக் கண்ணாடி முகக்கவசத்தை அணிந்து அவர்கள் பணிக்கு செல்வார்கள். தற்போது மாநகராட்சி பகுதியில் நோய் பரவும் பகுதி கண்டறியப்பட்டு அவை தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. தற்போது வைரஸ் பரவி வருவதை கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தான் தற்போது பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்திவிடலாம் என்றார்.
 

TAGS
Erode Corporation

Leave a Reply