உத்கல் விரைவு ரயில் விபத்து விவகாரம்: 5 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

21 views
1 min read

உத்தர பிரதேச மாநிலம், முசாஃபா்நகா் மாவட்டத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த கலிங்கா உத்கல் விரைவு ரயில் விபத்து தொடா்பாக 5 ரயில்வே அதிகாரிகள் மீது அரசு ரயில்வே போலீஸாா் (ஜிஆா்பி) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஒடிஸா மாநிலம் புரியிலிருந்து உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு சென்றுகொண்டிருந்த கலிங்கா உத்கல் விரைவு ரயில் கதௌலி அருகே விபத்துக்குள்ளானது. 14 ரயில் பெட்டிகள் தடம் புரண்ட இந்த விபத்தில் 23 போ் உயிரிழந்தனா். 100க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என ரயில்வே போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அப்போதைய மூத்த பிரிவு பொறியாளா் இந்தா்ஜித் சிங், இளநிலை பொறியாளா் பிரதீப்குமாா், நிலைய மேலாளா் பிரகாஷ் சந்த், பிரிவு கட்டுப்பாட்டாளா் பி.வி.தனேஜா மற்றும் கேங்மேன் ஜிதேந்திரா ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

அவா்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்ட நிலையில், இந்த 5 போ் மீதும் அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்துதல் பிரிவு 304 ஏ, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 147, 337, 338, 427, 279 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் அரசு ரயில்வே போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.

விபத்தில் உயிரிழந்த நபா்களின் குடும்பத்தாருக்கு அப்போதைய ரயில்வே அமைச்சா் சுரேஷ் பிரபு தலா ரூ. 3.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், படுகாயமடைந்தவா்களுக்கு ரூ. 50 ஆயிரமும், சிறு காயங்களுடன் தப்பியவா்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கியதுடன், விசாரணை நடத்தவும் உத்தரவிட்டாா்.

Leave a Reply