உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்

21 views
1 min read
tirupur

இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் அவிநாசி அருகே பொங்குபாளையத்தில் ஆர்ப்பாட்டம்

 

உயர்மின் கோபுரம் அமைக்கப்படுவதால், இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் அவிநாசி அருகே பொங்குபாளையத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் ஒன்றியம், பொங்கு பாளையம் ஊராட்சி பகுதிகளில் உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக தமிழக அரசின் மின்வாரியத்தின் மூலமாக அரசூர் – ஈங்கூர் 230 கே.வி. மின் வழித்தடம் அமைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்திற்கு உள்பட்ட கருமத்தம்பட்டி, திருப்பூர் மாவட்டத்திற்கு உள்பட்ட செம்மாண்டம்பாளையம், ராக்கியாபாளையம், செட்டிபாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், செங்கப்பள்ளி, புஞ்சைதளவாய்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் வழியே உயிர் மின் கோபுரமும், மின்கம்பியும் அமைக்கப்படுகிறது. 

இதனால், இந்நிலத்தில் பயிர் செய்துள்ள தென்னை, சோளம், பருத்தி, காய்கறிப் பயிர்கள், வேம்பு உள்ளிட்ட வளர்ந்த மரங்கள் சேதமாவதாலும், நிலமதிப்பு வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாலும் உயர்மின் கோபுரம் மாற்றுப்பாதையில் அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 

மேலும் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு கோவை மாவட்டத்தில் ஒரு இழப்பீடும், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு இழப்பீடும் கணக்கிடப்படுகிறது. இதனால் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அமைக்கப்பட்டு வரும் மின் கோபுரங்களுக்கும், கம்பி செல்லும் பாதைக்கும் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். 

நிலத்திற்கான இழப்பீட்டை, கோவை மாவட்ட ஆட்சியர் பின்பற்றிய வழிமுறையான கிராமத்தின் உயர்ந்தபட்ச வழிகாட்டி மதிப்பை எடுத்துக் கணக்கிட்டு சந்தை மதிப்பில் வழங்க வேண்டும் எனக் கோரியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொங்கு பாளையம் ஊர்வழித்தோட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி பாலு தோட்டத்தில் வியாழக்கிழமை மதியம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு உயர் மின் கோபுர எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்து (எ) வேலுச்சாமி தலைமை வகித்தார். பொங்கு பாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சி.ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாயிகள் சங்க பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ஆர். சண்முகசுந்தரம்,

மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், வடக்கு ஒன்றிய தலைவர் கே.ரங்கசாமி, செயலாளர் எஸ்.அப்புசாமி, பொருளாளர் ஆறுமுகம், அவிநாசி ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் கோரிக்கை நிறைவேறும் வரை வேலை செய்ய தங்களது நிலத்தில் அனுமதிப்பது இல்லை எனவும் விவசாயிகள் அறிவித்தனர்.

TAGS
திருப்பூர்

Leave a Reply