உலகை அச்சுறுத்திய வைரஸ் சினிமாக்கள்!

21 views
1 min read
sk15

 

தமிழில் கமல்ஹாசனின் “தசாவதாரம்’, முருகதாஸின் “ஏழாம் அறிவு’ எனச் சில படங்கள் தொற்றுக் கிருமி கதையை கருவாக கொண்டிருந்தாலும் அதற்கான பாதிப்பு காட்சியமைப்புகள் குறைவாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், உலக அழிவு பற்றிய படங்களை மாதம் ஒருமுறை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஹாலிவுட் திரையுலகில் இதுபோன்ற ஆச்சரியங்களுக்குக் குறைவில்லை. வெளிவந்த சமயத்தில் கூட சரியாக ஓடாத படங்கள் இதுபோன்ற திடீர் டிரெண்டிங் சமயத்தில் வைரல் ஆகிவிடும். அந்த வகையில் தற்போது பரவலாக பார்க்கப்படும் ஹாலிவுட் படங்களின் ட்ரெய்லர் இதோ…

அவுட் பிரேக் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு குரங்கின் வழியாகக் கடத்தப்படும் ஒரு வைரஸ், அதன் அழிவுகள், கண்டுபிடிப்பு… இதுதான் “அவுட்பிரேக்’. ராணுவ மையத்தைத் தாண்டி வெளியே பரவ ஆரம்பிக்கும் வைரûஸயும் கண்டறிந்து, மருத்துவர்கள் அதை எப்படிக் கட்டுப்படுத்தி அந்த ஊரைக் காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை. வுல்ஃப்கேங் பீட்டர்சன் என்பவரால் இயக்கப்பட்டு 1995-இல் வெளியான இப்படம், அப்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இப்படங்களைத் தாண்டி “The Omega man’, “World War Z’, “Pandemic’ போன்ற திரைப்படங்கள் வைரஸால் பாதிக்கப்படும் மக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பிரபல ஜாம்பி படங்கள். மேலும், பிரபல அமெரிக்க நாவல்கள் இரண்டும் வைரஸ் பரவுதலை எப்போதோ கணித்துள்ளன. அதில் ஒன்று 1981-ஆம் ஆண்டு வெளிவந்த  “The Eyes of Darkness’ என்ற நாவல். இந்தக் கதையில் ஆராய்ச்சி மையத்தில் கண்டுபிடிக்கப்படும் ஒரு கிருமியில் வுகான் வைரஸ் (Wuhan Virus) பரவுவதாக 40 வருடங்களுக்கு முன்னரே எழுதியிருக்கிறார் எழுத்தாளர் டீன் கூன்ட்ஸ்.

எண்ட் ஆஃப் டேஸ்

இரண்டாவது புத்தகம் சில்வியா பிரவுன் எழுதிய “End of Days: Predictions and Prophecies about the End of the World’. இதை நீங்கள் நிச்சயமாக வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களில் கவனித்திருக்கலாம். 2008-இல் வெளிவந்த இந்தக் கணிப்புகள் சார்ந்த புத்தகம், மிகச்சரியாக 2020-ஆம் ஆண்டு ஒரு மோசமான தொற்று நோய் உலகமெங்கும் பரவும் என்றும் நுரையீரலைப் பாதிக்கும் அந்த தொற்று எந்த எதிர்ப்பு மருந்துக்கும் கட்டுப்படாது என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஆச்சர்யம் அதோடு நிற்கவில்லை. இந்த தொற்றுப் பரவலால் உயிரிழப்புகள் ஏற்படும் என்றாலும் அது தானாகவே கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும் என்றும், மீண்டும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றி பின்னர் மொத்தமாக மறைந்து விடும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 

12 மங்கிஸ்

இது ஓர் அறிவியல் புனைவு திரைப்படம். கால பயணத்தின் வழியாக ஒரு மிகப்பெரிய தொற்று நோயை உருவாக்கி அதன் விளைவாக மொத்த மனித குலத்தையும் ஒரு குழு அழிக்க முயற்சி செய்யும் கதைதான் இது. படத்தில் பிளேக் பரவுதல் பற்றி மிக நேர்த்தியாகக் காட்டப்பட்டிருக்கும். இதே பெயரில் ஒரு ஆங்கில தொலைக்காட்சி தொடரும் வந்து பிரபலமானது. மாறுபட்ட வேடத்தில் பிராட் பிட்டும், ஹீரோவாக “டை ஹார்டு’ புகழ் ப்ரூஸ் வில்லீஸூம் நடித்திருப்பார்கள்.

கன்டேஜியன்

2011-ஆம் ஆண்டு ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கி வெளியான இந்தத் திரைப்படம் அப்போதே செம ஹிட் அடித்தது.

படத்தின் கதை இதுதான். நாயகி ஹாங்காங் பயணத்தின்போது அந்த நாட்டு சமையல்காரர் ஒருவருடன் கைகுலுக்கும் இடத்தில்தான் படம் தொடங்குகிறது. அவர் அமெரிக்கா திரும்பியவுடன் தும்மல், இருமல் என உடல் மோசமடைந்து இறுதியில் திடீரென இறந்துவிடுகிறார்.

அவரது உறவினர்கள் தொடங்கி அவர் பயணத்தில் தொட்ட இடத்தில் எல்லாம் பரவும் தொற்று நோய், பின்னர் உலகமெங்கும் பரவி விடுகிறது. அதிவேக தொற்றுக் கிருமியைக் கட்டுப்படுத்த இப்போது போலவே உலக விமான நிலையங்கள் முடக்கப்படுகின்றன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

எம்இவி-1 என்று அறியப்படும் வைரஸால் அடுத்தடுத்து பல கதாபாத்திரங்கள் உயிரிழக்க நேரிட, உலக இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 20% ஆகிவிடுகிறது. புதிய மருந்து கண்டுபிடிப்பது, பின்னணியில் நடக்கும் அரசியல் எனப் பல அறிவியல் திருப்பங்கள் கொண்டு கதை விறுவிறுப்பாக நகர்கிறது.

தற்போது கோவிட்-19 எனப்படும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் உலகிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில் தற்போது கன்டேஜியன் படம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

குவாரன்டைன்

இந்தப் படம் “ரெக்’ (Rec) என்ற ஸ்பானிஷ் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தீயணைப்பு வீரர்களின் இரவுப் பணிகளை ஆவணப்படுத்த தொலைக்காட்சி நிருபரான ஏஞ்சலா தன் கேமரா மேன் ஸ்காட் செல்கிறார்கள். பெரும்பாலும் இரவு நேரங்களில் தீயணைப்புத் துறைக்கு வரும் அழைப்புகள் மருத்துவ ரீதியான உதவிகளாகவே இருக்கும் என்று தீயணைப்புத்துறை நிலைய தலைமை அதிகாரி தெரிவிக்கிறார். 

அவர்கள் எதிர்பார்த்தது போலவே அழைப்பு வரும். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தனியாக வசிக்கும் மூதாட்டியின் அறையிலிருந்து மரண ஓலம் கேட்டிருக்கும். அதனைக் கேட்ட அக்கம் பக்கத்து வீட்டார் அவசர எண்ணைத் தொடர்பு கொண்டு அழைத்திருப்பார்கள். தீயணைப்பு வீரர்களுக்கு முன்பே இரண்டு போலீஸார் அங்கே வந்திருப்பார்கள். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கதவை உடைத்துத் திறந்து உள்ளே சென்று பார்த்தால், அந்த மூதாட்டி ரத்தமும் எச்சிலும் வழியும் வாயுடன் நின்று கொண்டிருப்பார். அசாதாரணமான உடல் மொழியுடன் அவர் நடந்து கொள்வார். அவரை மீட்கும் முயற்சியில் ஒரு போலீஸ்காரருக்கும் ஒரு தீயணைப்பு வீரருக்கும் படுகாயம் ஏற்பட்டுவிடும்.

அந்தக் கட்டடத்தைவிட்டு உடனே வெளியே வந்து மருத்துவமனை செல்ல முடிவெடுப்பார்கள். ஆனால், அந்தக் கட்டடம் வெளிப்புறமாக சீல் வைக்கப்பட்டுவிடும். ராணுவமும், நோய்த் தடுப்பு மைய ஆட்களும் அந்தக் கட்டடத்தைச் சுற்றி வளைத்து விடுவார்கள். பிறகுதான், புதிய விதமான வீரியம் மிகுந்த ரேபிஸ் வைரஸ் தொற்று அந்தக் கட்டடத்தில் சிலருக்கு ஏற்பட்டுள்ளது என்பது கட்டடத்துக்குள் இருப்பவர்களுக்குத் தெரியவரும். இந்த வைரûஸ எக்காரணம் கொண்டும் அந்தக் கட்டடத்தைவிட்டு வெளியே வரவிடக் கூடாது என்று அரசாங்கம் முடிவெடுத்துவிடுகிறது. இதற்கிடையில் கட்டடத்துக்குள் தனிமைப்படுத்தப் பட்ட நபர்கள் ஒவ்வொருவராக வைரஸ் தொற்றுக்கு ஆளாவார்கள். வைரஸ் தொற்று ஏற்பட்ட சில மணித்துளிகளில் சுயக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருப்பவரைத் தாக்க ஆரம்பித்துவிடுவார்கள். உள்ளே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தும், வெளியே இருக்கும் ராணுவத்திடம் இருந்தும் ஏஞ்சலா, ஸ்காட் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தப்பினார்களா? இல்லையா? என்று திடுக்கிட வைக்கும் காட்சிகளுடன் கதை சொல்லப்பட்டிருக்கும்.

ஹேப்பனிங்

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் மர்ம விஷப்பொருள் காற்றில் பரவ ஆரம்பிக்கும். முதலில் அதன் தாக்கம் நியூயார்க் நகரத்தில் உள்ள பூங்காவில் தெரியும். விஷத்தன்மை கொண்ட காற்றைச் சுவாசித்தவுடன் மூளையில் உள்ள நியூரோ ட்ரானாஸ்மீட்டர்களைப் பாதித்து உடனே தற்கொலை செய்து கொள்வார்கள். 

படத்தின் நாயகனான எலியாட், நியூயார்க் நகரத்தில் ஒரு பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிவார். நியூயார்க்கில் நிலைமை சரியில்லை என்று பிலடெல்பியா மாகாணத்துக்குத் தன் மனைவி ஜூயி, மற்றும் எலியட்டுடன் கணக்கு ஆசிரிய ராகப் பணிபுரியும் ஜூலியனுடன் ரயிலில் கிளம்புவார். 

பிலடெல்பியா சென்று சேரும் முன்பே ரயில் சேவைகள் நின்றுவிடும். சிறிய கிராமத்தில் ரயிலில் இருந்து இறக்கிவிடப்படும் மக்கள், வடகிழக்கு மாகாணங்கள் முழுதும் இந்த விபரீதம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவார்கள். ஜூலியன் தன் மகளை எலியாட் மற்றும் ஜூயி பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு தன் மனைவியைத் தேடிக் கிளம்பிவிடுவார். தன் மனைவி, ஜெஸ் மற்றும் சிலரோடு பாதுகாப்பான இடத்தைத் தேடி அலைவார் எலியாட். அவர்கள் தப்பினார்களா? ஜூலியன் தன் மனைவியை ஆபத்தில் இருந்து மீட்டாரா என்பதை விறுவிறுப்பாகச் சொல்லி படத்தை தன் பாணியில் அட்டகாசமாக முடித்திருப்பார் இயக்குநர் எம்.நைட் ஷியாமளன்.
 

TAGS
ஏழாம் அறிவு எண்ட் ஆஃப் டேஸ் 12 மங்கிஸ் கன்டேஜியன் குவாரன்டைன் ஹேப்பனிங்

Leave a Reply