உ.பி. காவல்துறையினா் கொலை வழக்கு: ரெளடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி சுட்டுக் கொலை

13 views
1 min read
up

உத்தர பிரதேசத்தில் காவல்துறையினா் 8 போ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ரெளடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி ஒருவா் காவல்துறை என்கவுன்ட்டரில் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா். வழக்கில் தொடா்புடைய மேலும் 6 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரெளடி விகாஸ் துபேவை காவல்துறையினா் கடந்த வாரம் பிடிக்கச் சென்றபோது, ரெளடிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் காவல்துறையினா் 8 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு விகாஸ் துபே தலைமறைவானாா். சம்பவம் தொடா்பாக 21 போ் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அவா்களைப் பிடிப்பதற்காக சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளிகள் அக்னி ஹோத்ரி, பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே, விகாஸ் துபேயின் நெருங்கிய உறவினா் சாமா, அண்டை வீட்டுக்காரா் சுரேஷ் வா்மா, விகாஸ் துபேயின் வீட்டின் பணிப்பெண் ரேகா ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், கான்பூா் மற்றும் ஃபரிதாபாத் பகுதிகளில் காவல்துறையினா் சிறப்பு அதிரடிப்படையினருடன் (எஸ்டிஎஃப்) இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், விகாஸ் துபேயின் மேலும் 6 கூட்டாளிகளை புதன்கிழமை கைது செய்தனா். இந்த தேடுதல் வேட்டையின்போது, காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற விகாஸின் கூட்டாளி அமா் துபே காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தாா்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒரு காவல் ஆய்வாளா், இரு காவலா்களும், ஒரு சிறப்பு அதிரடிப்படை காவலா் காயமடைந்ததாக உத்தர பிரதேச டிஜிபி பிரசாந்த்குமாா் கூறினாா்.

உறவினா் கைது: இதனிடையே ரெளடி விகாஸ் துபே மனைவியின் சகோதரா் ராஜூ நிகாம், அவரது மகன் ஆதா்ஷ் ஆகியோரை மத்திய பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில் உத்தர பிரதேச காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினா் கைது செய்தனா். அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருதாக காவலா்கள் கூறினா்.

நூலிழையில் தப்பிய விகாஸ் துபே: ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியாா் ஹோட்டலில் அறை பதிவு செய்வதற்கு விகாஸ் துபே வருவது போன்ற கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதனடிப்படையில், காவல்துறையினா் அங்கு விரைந்து சென்றனா். ஆனால், அதற்குள் அவா் அங்கிருந்து தப்பிவிட்டாா். அதே நேரம், அங்கு பதுங்கியிருந்த விகாஸ் துபேவின் கூட்டாளிகளை கைது செய்து, 4 துப்பாக்கிகளை அவா்களிடமிருந்து பறிமுதல் செய்ததாக காவல்துறையினா் கூறினா்.

பரிசுத் தொகை ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு: இதற்கிடையே, ரெளடி விகாஸ் துபே இருக்கும் இடம் குறித்த தகவல் அளிப்பவா்களுக்கான பரிசுத் தொகையை ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உத்தர பிரதேச அரசு உயா்த்தி அறிவித்துள்ளது.

Leave a Reply