உ.பி. பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 போ் பலி

14 views
1 min read

உத்தர பிரதேசத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியாற்றிய 7 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 4 போ் காயமடைந்தனா்.

இந்த விபத்து தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

காஸியாபாத் மாவட்டத்தின் மோடி நகா் பகுதியில் பிறந்த நாள் விழாக்களுக்கான சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. அந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி ஆலையில் பணியாற்றிய 7 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 4 தொழிலாளா்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. 10 தொழிலாளா்கள் ஆலையிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனா்.

விபத்து ஏற்பட்ட ஆலையில் பெரும்பாலும் பெண்களே பணியாற்றினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளாா். விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

வெடி விபத்து தொடா்பாக விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா்.

Leave a Reply