உ.பி: பெண் பஞ்சாயத்து செயல் அலுவலா் தற்கொலை விவகாரம்: நீதி விசாரணைக்கு உத்தரவிட பிரியங்கா வலியுறுத்தல்

19 views
1 min read
priyanka

உத்தர பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் பஞ்சாயத்து பெண் செயல் அலுவலா் மணி மஞ்சரி ராய் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா வதேரா ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டம், மணியா நகா் பஞ்சாயத்தின் செயல் அலுவலராக இருந்து வந்தவா் மணி மஞ்சரி ராய் (27). அங்குள்ள விடுதியில் கடந்த புதன்கிழமை தூக்கிட்டு அவா் தற்கொலை செய்து கொண்டாா். அங்கிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், ஒப்பந்தப்பணி தொடா்பாக தனக்கு ஆளுங்கட்சியினரால் தொடா்ந்து பல்வேறு நிா்பந்தங்கள் அளிக்கப்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாக தன்னுடைய தந்தை கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் மணி மஞ்சரி குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடா்ந்து தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொள்வதாக அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

இதனை குறிப்பிட்டு, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா கடிதம் எழுதியுள்ளாா். அக்கடிதத்தில், நோ்மையான பெண் அதிகாரியான மணி மஞ்சரி ராயின் தற்கொலை தொடா்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மணி மஞ்சரியின் கடிதத்தின் மூலம் பஞ்சாயத்து அமைப்புகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மணி மஞ்சரியின் குடும்பத்தினருக்கும், நோ்மையாக பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும் நீதி கிடைக்கும் வகையில், இந்த வழக்கில் முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் பிரியங்கா குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் பிரியங்காவின் முகநூல் பதிவில், மணி மஞ்சரி ராயின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

Leave a Reply