எடை குறைவாக அரிசி விநியோகம் செய்வதாக புகார்: ரேஷன் கடையில் அமைச்சர் ஆய்வு; ஊழியர் பணியிடை நீக்கம்

10 views
1 min read
sellur raja slams h.raja

கோப்புப் படம்

மதுரை: எடை குறைவாக அரிசி விநியோகிக்கப்பட்டதாக பெண் அளித்த புகாரையடுத்து, உடனடியாக இரு சக்கர வாகனத்தில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்குச் சென்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு,  அங்கு ஆய்வு செய்து எடையாளரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். 

அதிமுக சார்பில், மதுரை பெத்தானியாபுரத்தில் பொதுமக்களுக்கு கரோனா நிவாரணத் தொகுப்பு பைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் கே. ராஜு, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு பெண்,  இப்பகுதியில் இருக்கும் நியாய விலைக் கடையில் பாதிக்குப் பாதி அளவு மட்டுமே அரிசி விநியோகம் செய்யப்படுவதாக, அமைச்சரிடம் புகார் தெரிவித்தார். மேலும், கடை ஊழியர்களிடம் இது பற்றி கேட்டதற்கு பதில் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.

 இதையடுத்து, கடை விவரத்தை அந்த பெண்ணிடம் விசாரித்த அமைச்சர், உடனடியாக அங்கிருந்த கட்சி நிர்வாகி ஒருவரின் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சம்பந்தப்பட்ட கடைக்கு நேரடியாகச் சென்றார். கடைக்குள் பொருள்களை விநியோகித்துக் கொண்டிருந்த அந்த நபரை விசாரித்தபோது, அவருக்கும் கடைக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.

     அவர், அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பதும், கடையின் எடையாளர் தர்மேந்திரன் என்பவருக்கு உதவியாக அங்கீகாரம் இல்லாத பணியாளராக இருந்து வந்ததும் தெரியவந்தது. அதையடுத்து, பெரியசாமியை கைது செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.

      நியாய விலைக் கடையில் பயன்படுத்தப்பட்ட விற்பனை முனைய கருவியில் ஆய்வு செய்தபோது, அப்பெண்ணுக்கு 20 கிலோ அரிசி விற்பனை செய்யப்பட்டிருப்பதாகப் பதிவாகியுள்ளது. ஆனால், அவருக்கு 9.5 கிலோ மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சர் உத்தரவின்பேரில், கடையின் எடையாளரை கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் பணி இடைநீக்கம் செய்துள்ளார்.
 

Leave a Reply