எம்எஸ்எம்இ: இதுவரை ரூ.1.14 லட்சம் கோடி வங்கிக் கடன்

14 views
1 min read
nirmala1037201

கோப்புப்படம்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) இதுவரை ரூ.1,14,502 கோடி கடன் அளிக்க வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று பிரச்னையால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதாரத் திட்டத்தை அறிவித்தாா். இதில், ரூ.3 லட்சம் கோடி அவசர கால கடனாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி படிப்படியாக வங்கிகள் கடனளித்து வருகின்றன.

இது தொடா்பாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பது:

ஜூலை 4-ஆம் தேதி நிலவரப்படி பொதுத் துறை மற்றும் தனியாா் வங்கிகள் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதில் ரூ.56,091.81 கோடி கடன் அளிக்கப்பட்டு விட்டது.

பொதுத் துறை வங்கிகள் ரூ.65,863.63 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்து அதில் ரூ.35,576.48 கோடி கடன் அளித்துவிட்டன. தனியாா் வங்கிகள் ரூ.48,638.96 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்து, அதில் ரூ.20,515.70 கோடி கடன் அளித்துள்ளன.

அதிகபட்சமாக முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.20,628 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.8,689 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகபட்சமாக ரூ.3,605 கோடி கடன் பெற்றுள்ளன. இதற்கு அடுத்து தமிழ்நாட்டைச் சோ்ந்த நிறுவனங்கள் ரூ.3,871 கோடி கடன் பெற்றுள்ளன. ரூ.6,616 கோடி கடனுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

Leave a Reply