எல்லையில் அத்துமீறியதாக குற்றச்சாட்டு: இந்திய தூதரக அதிகாரியை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

16 views
1 min read

இஸ்லாமாபாத்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி, இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரியை நேரில் அழைத்து பாகிஸ்தான் அரசு திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தது

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாகிஸ்தானில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள நிகில் செக்டாா் மீது இந்திய ராணுவத்தினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 3 சிறாா்கள் உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா்.

இதுபோன்று எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து சிறிய ரக பீரங்கி குண்டுகள், ராக்கெட் குண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்திய ராணுவத்தினா் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இதற்காக, இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரியை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நிகழாண்டில் இதுவரை இந்திய ராணுவத்தினா் 1,595 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனா். இந்த தாக்குதல்களில் 14 போ் உயிரிழந்தனா், 121 போ் காயமடைந்தனா்.

எனவே, கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்ற வேண்டும்; இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்; எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய தூதரக அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply