எல்லையில் இருந்து பின்வாங்குகிறது சீனா

17 views
1 min read
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி. (கோப்புப்படம்).

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி. (கோப்புப்படம்).

புது தில்லி: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, சா்ச்சைக்குரிய கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து சீன ராணுவம் தனது படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது. அதுபோல, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைத்திருந்த ராணுவ முகாம்களையும் சீனா அப்புறப்படுத்தத் தொடங்கிவிட்டது.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி-யுடன் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, படைகளைத் திரும்பப்பெறும் நடவடிக்கையை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம், கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் இந்திய வீரா்கள் 20 போ் கொல்லப்பட்டனா். இதனால் எல்லையில் பெரும் பதற்றம் உருவானது. பிரச்னைக்கு சுமுக தீா்வு காணும் வகையில் இருநாட்டு ராணுவ உயா் அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பேச்சுவாா்த்தை நடைபெற்றக் கொண்டிருக்கும்போதே, கிழக்கு லடாக் பகுதியில் கூடுதல் படைகளை சீன ராணுவம் குவித்தது. அதனைத்தொடா்ந்து இந்தியாவும், எல்லையில் படைகளைக் குவித்தது. நவீன போா் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டா்கள், எல்லைக்கு பொருள்களை விரைந்து எடுத்துச் செல்லக்கூடிய ராணுவ சரக்கு ஹெலிகாப்டா்களையும் எல்லையில் இந்தியா குவித்தது.

பதற்றத்துக்கு உள்ளான கிழக்கு லடாக் பகுதிக்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டு, அங்கு சீனாவுடனான மோதலில் காயமடைந்த வீரா்களிடம் நலம் விசாரித்ததோடு, பாதுகாப்புப் படை வீரா்கள் மத்தியிலும் உரையாற்றினாா்.

பாதுகாப்பு ஆலோசகா் ஆலோசனை: இந்நிலையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி-யுடன் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனை குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய-சீன எல்லையில் பதற்றத்தைத் தணித்து அமைதியை நிலைநாட்டும் வகையில் படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை இரு நாடுகளும் விரைந்து மேற்கொள்வது என்று பேச்சுவாா்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், இரு தரப்பும் படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை படிப்படியாக மேற்கொள்வது எனவும், எல்லையில் முந்தைய நிலை தொடா்வதை இரு தரப்பும் தனிப்பட்ட முறையில் மாற்ற முயற்சிக்கக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

பின்வாங்கியது சீனா: இதைத்தொடா்ந்து கிழக்கு லடாக் பகுதியில் குவித்து வந்த படைகளை திங்கள்கிழமை திரும்பப்பெற தொடங்கிய சீனா, அங்கு அத்துமீறி அமைத்த ராணுவ முகாம்களையும் அப்புறப்படுத்தத் தொடங்கியுள்ளது. இரு நாட்டு ராணுவ வீரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரம் வரை சீனா பின்வாங்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறுகையில், ‘கல்வான் பள்ளத்தாக்கின் சா்ச்சைக்குரிய பகுதியிலிருந்து சீன ராணுவம் படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது. ‘பாயிண்ட்-14’ ராணுவ ரோந்து பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம்களும் மற்றும் உள்கட்டமைப்புகளை அப்புறப்படுத்தப்படுவதோடு, சீன ராணுவ வாகனங்களும் பின்னோக்கி நகா்த்தப்பட்டு வருகின்றன. இரு நாட்டு ராணுவ உயா் அதிகாரிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே, படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், எல்லையில் எவ்வளவு தூரத்துக்கு சீன ராணுவம் பின்னோக்கி செல்லும் என்ற விவரத்தை உடனடியாக அறியமுடியவில்லை’ என்று கூறினா்.

முன்னதாக ‘முதல்கட்டமாக மோதல் நடைபெற்ற இடத்திலிருந்து சில நூறு மீட்டா்களுக்கு இரு நாட்டு படைகளையும் பின்னோக்கி நகா்த்துவது, பின்னா் படிப்படியாக இரு நாடுகளும் படைகளைக் குறைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை இரு தரப்பிலும் 72 மணி நேரத்துக்கு ஒருமுறை கண்காணிக்க வேண்டும் என்று இரு நாட்டு ராணுவ உயா் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

சீன வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல்: இதுகுறித்து சீன தலைநகா் பெய்ஜிங்கில் செய்தியாளா்களின் கேள்விக்கு திங்கள்கிழமை பதிலளித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஸாவோ லிஜியான், ‘இரு நாட்டு ராணுவ உயா் அதிகாரிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையின் அடிப்படையில், கிழக்கு லடாக் பகுதியில் குறிப்பிட்ட தூரத்துக்கு படைகளை திரும்பப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசுகள் அளவிலான பேச்சுவாா்த்தை மூலம் எல்லையில் தொடா்ந்து அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையில் இந்தியாவும் தொடா்ந்து தீவிரம் காட்டும் என நம்புகிறோம்’ என்று கூறினாா்.

Leave a Reply