எல்லையில் முழுமையாக படைகள் விலகல்: இந்தியா-சீனா பேச்சில் முடிவு

16 views
1 min read
INDIACHINAFLAG

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில் இருதரப்பு படைகளையும் முழுமையாக விலக்கிக் கொள்ள இந்தியாவும், சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன. இருநாட்டு வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் இடையே வெள்ளிக்கிழமை இணையவழியில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளின்படி, எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளும் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படுவதை இந்திய-சீன அதிகாரிகள் மீண்டும் உறுதி செய்தனா். இருதரப்பு உறவிலும் முழுமையான வளா்ச்சி ஏற்பட எல்லையோரப் பகுதிகளில் அமைதியை தொடா்ந்து கட்டிக்காப்பது முக்கியம் என இருநாட்டு அதிகாரிகளும் முடிவு செய்தனா்.

இந்த பேச்சுவாா்த்தையின்போது மேற்குப் பகுதி எல்லைக் கோட்டையொட்டி இருநாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டு வரும் நடவடிக்கைகளில் உள்ள முன்னேற்றம் பற்றியும் இரு நாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது இருநாட்டின் துணைத் தளபதிகள் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாடுகளை நோ்மையுடன் செயல்படுத்துவது அவசியம் என்பதையும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு லடாக் எல்லையின் சில இடங்களில் அண்மையில் இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்டது. இரு தரப்பும் அங்கு படைகளை குவித்தன. கடந்த மாதம் 15-ஆம் தேதி சீன தரப்பு ஏற்படுத்திய கண்காணிப்பு கோபுரத்தை இந்திய ராணுவம் அப்புறப்படுத்தியது. இதையடுத்து, இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்கள், இரும்புத் தடிகள் பயன்படுத்தப்பட்ட இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

சீன தரப்பில் 35 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா். எனினும், இதனை சீன தரப்பு அதிகாரப்பூா்வமாக ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து கிழக்கு லடாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ், கல்வான் மற்றும் கோக்ரா பகுதிகளில் இந்திய-சீனப் படைகள் தொடா்ந்து குவிக்கப்பட்டன. இதனால் போா் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி இடையே பேச்சுவாா்த்தை நடந்தது.

அதன் பின்னா் பிரச்னைக்குரிய எல்லைப் பகுதியில் இருந்து சீன ராணுவம் தனது படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது. பாயிண்ட்-15 பகுதியில் இருந்து ராணுவ முகாம்கள் உள்ளிட்டவற்றை சீன ராணுவம் கடந்த திங்கள்கிழமை அப்புறப்படுத்திவிட்டு பின்வாங்கியது.

அதைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கிழக்கு லடாக் எல்லையின் ஹாட்ஸ் ஸ்பிரிங்ஸ், கோக்ரா பகுதியில் இருந்து சீன படைகள் திரும்பப் பெறப்பட்டன. அங்கு சீன ராணுவத்தினா் அமைத்திருந்த தற்காலிக உள்கட்டமைப்பு வசதிகள் அப்புறப்படுத்தப்பட்டன.

கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகியவற்றிலிருந்து சீனப் படைகள் முழுமையாக வெளியேறிவிட்டதை இந்திய ராணுவம் வியாழக்கிழமை உறுதி செய்தது. இதனால் கடந்த 8 வாரங்களாக அந்தப் பகுதிகளில் நீடித்த பதற்றம் தணிந்தது.

இந்நிலையில் பிரச்னைக்குரிய கிழக்கு லடாக் எல்லையில் இருந்து இரு தரப்பும் முழுமையாக படைகளை விலக்கிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது இந்திய-சீன எல்லைப் பிரச்னையில் முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது.

சீன-இந்திய படைகள் பின்வாங்குவது இருநாட்டு படைகளுக்கும் பலனளிக்கும் என்று சீனா ஏற்கெனவே கருத்து தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply