ஐபிஎல் போட்டியை நடத்த நியூசிலாந்து விருப்பம்!

20 views
1 min read
ipl_2020_new

 

இந்த வருட ஐபிஎல் போட்டியை நடத்த கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நியூசிலாந்து விருப்பம் தெரிவித்துள்ளது. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்கிற கேள்விக்கு விடை தேடுவதற்காக ஐசிசி கூட்டம் ஜூன் 10 அன்று நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் கரோனா அச்சுறுத்தல் குறைந்துள்ள நிலையில் பொறுத்திருந்து இறுதி முடிவை எடுக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐசிசி ஒத்தி வைத்தால், செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எனினும் ஐசிசியின் முடிவை வைத்தே பிசிசிஐயின் திட்டங்கள் செயல்வடிவம் பெறும்.

இந்த வருட ஐபிஎல் போட்டி பற்றி பிசிசிஐ தரப்பு ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குக் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியை எங்கு நடத்துவது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை. பெரும்பாலும் வெளிநாட்டில் நடக்கவே வாய்ப்புண்டு. இந்தியாவில் உள்ள சூழல் ஐபிஎல் போட்டியை நடத்த சாதகமாக இல்லை. இதனால் இலங்கையிலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலோ ஐபிஎல் போட்டியை நடத்தத் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியை நடத்த இலங்கை, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அடுத்ததாக நியூசிலாந்தும் விருப்பம் தெரிவித்துள்ளது. பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிசிசிஐயைச் சேர்ந்த அதிகாரி கூறியதாவது:

இந்தியாவில் போட்டியை நடத்தவேண்டும் என்பதுதான் எங்களுடைய முதல் விருப்பம். ஆனால் அது பாதுகாப்பாக இல்லையென்றால் வெளிநாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்துவோம். இலங்கை, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அடுத்ததாக கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நியூசிலாந்தும் ஐபிஎல் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளார்.

TAGS
IPL

Leave a Reply