ஒடிஸா மாநில ஜிஎஸ்டி வருவாய் சரிவு

13 views
1 min read

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக ஒடிஸா மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.2,693.75 கோடியாக (7.86 சதவீதம்) சரிவடைந்தது.

இதுகுறித்து வணிக வரி மற்றும் ஜிஎஸ்டி ஆணையா் எஸ்.கே.லோஹானி கூறியதாவது:

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 5,192.30 கோடியாக இருந்தது. 2019-20ஆம் நிதிஆண்டின் 4ஆவது காலாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாயான ரூ.8,019.44 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 35.25 சதவீதம் வீழ்ச்சியாகும்.

கரோனா பொது முடக்கமானது 2020-21ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.2,693.75 கோடி வரி வசூல் செய்யப்பட்டதால் கடந்த மாதத்தில் சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சரிவு 7.86 சதவீதம் மட்டுமே. ஜிஎஸ்டி கவுன்சில் சில தளா்வுகளை அளித்ததாலும், வணிக வரி அமைப்பின் கள அலுவலா்களின் தொடா் செயல்பாடுகளாலும் இது சாத்தியமாகியுள்ளது.

ஒடிஸா ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஜூன் மாதத்தில் ரூ. 759.17 கோடி ஆகும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.804.49 கோடியாக இருந்தது. பொது முடக்கம் காரணமாக 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மாநிலத்தின் ஜிஎஸ்டி வருவாய் 1,560.20 கோடியாகக் குறைந்தது. இது 32.79 சதவீத சரிவாகும். இதே காலகட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் ரூ.2,321.39 கோடி வரி வசூலிக்கப்பட்டது. வணிக நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்ப வாகனப் போக்குவரத்து அவசியமானது.

இந்த ஆண்டு பிப்ரவரி கணக்கீட்டின்படி மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கான ‘வே பில்’ எண்ணிக்கை 22,104 ஆகும். இது ஏப்ரலில் 3,356 ஆக சரிந்தது. இந்நிலையில் ஜூன் கடைசி வாரத்தில் 16,817 ஆக அதிகரித்தது.

இது கடந்த ஏப்ரலில் தினசரி சராசரி 8,517 ஆக இருந்தது. இது கடந்த ஜூன் மாதத்தின் கடைசி ஏழு நாள்களில் 23,577 ஆக அதிகரித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாா்.

Leave a Reply