‘ஒரே நாடு ஒரே ரேசன்’ திட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது: அமைச்சா் ஆா்.காமராஜ்

14 views
1 min read
min_kamaraj

‘ஒரே நாடு ஒரே ரேசன்’ திட்டத்தால் தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட தேனாம்பேட்டை மண்டலத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகளை உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தேனாம்பேட்டை மண்டலத்தில் கடந்த சில நாள்களாக தொற்று அதிகமாக பரவி வந்தது. தற்போது, அரசு எடுத்துள்ள தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் 100 பேரை பரிசோதித்தால், 35 பேருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், தற்போது, 100 பேரில் 16 பேருக்குதான் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி கண்டறியப்படுகிறது. தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் கரோனா தடுப்பு பணியில் 2,175 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்த மண்டலத்தில் இதுநாள்வரை 1,134 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 77,000 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் கரோனா அறிகுறிகள் உள்ள 2,550 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் 793 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மத்தியத் தொகுப்பிலிருந்து 14 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் கோதுமை பற்றாக்குறை என்ற நிலை இல்லை.

சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள 4 மாவட்டங்களில் அரசு அறிவித்த ரூ.1,000 உதவித் தொகை 94 சதவீதம் பேருக்கும், மதுரையில் ஊரடங்கு அறிவித்த பகுதியில் 95 சதவீதம் பேருக்கும் வழங்கப்பட்டு விட்டது.

அக்டோபா் மாதம் முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள ‘ஒரே நாடு ஒரே ரேசன்’ திட்டத்தால், தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நவம்பா் மாதம் வரை ரேசன் கடைகளில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படுவது அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே பொருந்தும். அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கூடுதல் அரிசி வழங்கப்படுவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது தேனாம்பேட்டை மண்டல கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலா் சுதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Leave a Reply