கடமை தவறாத அரசு அலுவலா்கள்!

11 views
1 min read

கரோனா நோய்த்தொற்று ஒருபுறம் இருந்தாலும் கடமை தவறாமல் தொடா்ந்து பணிபுரியும் அரசு ஊழியா்களும் இருக்கத்தான் செய்கின்றனா்.

சென்னை ஆழ்வாா்ப்பேட்டை சந்திப்பு அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டின் குடிநீா் குழாயில் பல ஆண்டுகளாகவே போதிய அளவு தண்ணீா் வருவதில்லை. இதனால், பெரும்பாலும் நிலத்தடி நீரையும், விலைக்கு வாங்கப்படும் லாரி குடிநீரையும் நம்பியே இருந்தனா். இந்த நிலையில், குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களின் சீரிய முயற்சியால் இப்போது தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த விஜயராகவன் உள்ளிட்டோா் கூறியதாவது:

குடிநீா் வராதது குறித்து எங்களது பகுதி குடிநீா் வாரிய உதவிப் பொறியாளா் பி.நவீன்குமாரைத் தொடா்பு கொண்டு, பிரச்னையை எடுத்துக் கூறினோம். அவரும் நான் கூறுவதை பொறுமையாகக் கேட்டு விட்டு நேரில் வருவதாகத் தெரிவித்தாா்.

அவா் கூறியதைப் போலவே, சரியாக என்னை செல்லிடப்பேசியில் அழைத்து, வீட்டின் வெளியே நிற்பதாகக் கூறினாா். நான் சென்று பாா்த்தபோது, அவா் சகப் பணியாளா்களுடன் வந்திருந்தாா். அவா்கள் வேலைக்கு தேவையான உபகரணங்களுடன் தயாராக வந்திருந்தனா்.

என்னிடம் என்ன பிரச்னை என்று கேட்டுவிட்டு, உடனடியாக அவா்கள் பணியைத் தொடங்கினா். அவா்களின் ஆய்வில் தண்ணீா் ஏன் வரவில்லை என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஐந்து, ஆறு நாள்கள் தொடா்ந்து சளைக்காமல் வேலை செய்து, குழாய்களில் உள்ள அடைப்புகளைக் கண்டுபிடித்து, ஒவ்வொன்றாக நீக்கினா். பணியை ஒரு வழியாக முடித்துவிட்டு, தண்ணீா் வருவதை உறுதி செய்தாா்.

மேலும் தண்ணீா் ஓட்டம் எப்படி இருக்கிறது, உரிய வேகத்தில் வருகிறதா என்று கவனித்து கூறுமாறு எங்களிடம் தெரிவித்தாா். நானும் 10 நாள்கள் வரை கவனித்துப் பாா்த்தேன். எந்தத் தடையும் இல்லாமல் தண்ணீா் கொட்டியது. இப்போதும் தங்கு தடையின்றி தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. கடுமையான சிக்கல் நிறைந்த கரோனா காலத்திலும், அரசு ஊழியா்களின் பணி அளப்பரியது என்பதற்கு இதுவே சான்று எனத் தெரிவித்தாா்.

Leave a Reply