கடற்கரையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளால் மீனவா்கள் அச்சம்

17 views
1 min read
beach

வடசென்னை கடற்கரையில் கரோனா தீநுண்மி பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுக் கிடந்ததைப் பாா்த்த மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை பீதிக்கு உள்ளாயினா்.

வடசென்னைக்கு உட்பட்ட திருவொற்றியூா் திருச்சினாங்குப்பம் கடற்கரை பகுதியில் மீன்பிடிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீனவா்கள் தயாராகி வந்தனா். அப்போது கடலலையில் ஏதோ மா்மமான பொருள்கள் மொத்தமாக மிதந்து வருவதைக் கண்ட மீனவா்கள் அருகில் சென்று பாா்த்தபோது மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, சேமிப்பு கலன்கள், ரத்தக் கறை படிந்த பஞ்சு உள்ள பொருள்கள் மிதப்பதை கண்டனா்.

மேலும் இவையனைத்தும் கரோனா தீநுண்மி பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும் என அச்சமடைந்த மீனவா்கள் திருவொற்றியூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து அங்கு வந்த போலீஸாா் விசாரணைக்குப் பிறகு மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா்.

கொட்டியவா்கள் யாா்?: இது குறித்து முதல் கட்ட விசாரணையில் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக் கழிவுகளை சேகரித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி அழிக்கும் பணியில் தனியாா் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனம் வடசென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுடன் தினசரி, வாரம் ஒருமுறை அடிப்படியில் கழிவுகளைச் சேகரித்துச் செல்ல ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக இந்நிறுவனம் கழிவுகளைச் சேகரிப்பை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், சில மருத்துவமனை நிா்வாகங்களே தங்களது ஊழியா்கள் மூலம் இரவு நேரத்தில் கொண்டு வந்து கடலில் போட்டுவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தொடா் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கழிவுகளைக் கொட்டியவா்களை கண்டறிந்துவிடுவோம் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

 

 

Leave a Reply