கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி மீனவர்கள் கடலில் படகுகளை நிறுத்தி போராட்டம்

17 views
1 min read
cud2

கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி மீனவர்கள் உண்ணாவிரதம் மற்றும் கடலில் படகுகளை நிறுத்தி போராட்டம் நடத்தினர். 

கடலூர் மாவட்டத்தில் சுமார் 47 மீனவர் கிராமங்கள் உள்ளன. இதில் சில மீனவர் கிராமத்தினர் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இதற்கு மற்ற மீனவ கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இருதரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை 1 ஆம் தேதியன்று சுருக்குமடி வலையை பயன்படுத்தியதாக 22 படகுகளுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனை கண்டித்து மீன்வளத் துறையினர் மற்றும் காவல்துறையினரை மீனவர்கள் சிறை பிடித்தனர். 

பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று அதில் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்த அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. எனினும், மீனவர்கள் அந்த வலையை பயன்படுத்தி வியாழக்கிழமை மீன் பிடித்துக் கொண்டு கடலூர் துறைமுகம் திரும்பினர். அந்த மீனை ஏலம் விடுவதற்கு மீன்வளத் துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து மீனவர்கள் புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மீனை எடுத்து சென்று ஏலம் விட்டனர். 

அதனை வாங்கிச் சென்ற வியாபாரிகளின் சுமார் 20 வாகனங்களை மீன்வளத் துறையினர் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கண்டித்து வெள்ளிக்கிழமையன்று மீனவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரிய வாகனங்களுக்கு ரூ 50 ஆயிரமும், சிறிய வாகனங்களுக்கு ரூ 30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமையன்று தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தில் கடற்கரைப்பகுதியில் திடீர் உண்ணாவிரதத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர். 

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடுக்கடலில் படகுகளை வரிசையாக நிறுத்தி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில மீனவர்கள் தங்களது உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

TAGS
Cuddalore

Leave a Reply