கடைமடைக்கு வராத காவிரி நீர்: பொதுப்பணித்துறையே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு

19 views
1 min read
karamadai

சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் காவிரி நீர் வராமல் வறண்டு கிடக்கும் பாசன வாய்க்கால்கள்

 

நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர் இதுவரை வந்து சேராததால் குறுவை சாகுபடிக்குத் தயாராக இருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டும், அதன் பின்னர் மூன்று நாட்களுக்குப் பின் கல்லணை திறக்கப்பட்டும் டெல்டா மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களுக்கு குறுவை சாகுபடி செய்ய காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடைமடைப் பகுதிகளில் உள்ள ஆறுகளில் ஆங்காங்கே குடிமராமத்து பணிகள் அவசர கோலத்தில் நடப்பதால் விவசாயத்திற்குத் தண்ணீர் வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

குடிமராமத்து பணிகள் முன்கூட்டியே தொடங்கி முடிக்காததால் காலம் தாழ்ந்து அவசர அவசரமாக கட்டும் பணிகள் தரமாக அமையுமா என விவசாயிகள் அச்சம் கொள்கின்றனர். தூர்வாரும் பணிகள் சில இடங்களில் மட்டுமே நடைபெறுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 8 வருடங்களாக குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகள் மீண்டும் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு குறுவைக்கு நிலத்தை தயார்ப்படுத்தி வைத்துள்ள நிலையில், கடைமடைப் பகுதிகளுக்கு பொதுப்பணித் துறையினரின் மெத்தனத்தால்  தண்ணீர் வந்து சேருவதில் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இன்னும் இருபது நாட்கள் கழித்து கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் விட்டால் விதை விதைத்து நடவு பணிகள் செய்யும் நேரத்தில் மழைக் காலம் தொடங்கிவிடும் அப்போது விவசாயிகள் பெரும் சேதத்தைச் சந்திப்பார்கள் ஆகவே உரியக் காலத்தில் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீர்நிலைகளைத் தூர்வாரி தயாராக இருக்கும் நிலையில் தண்ணீர் காவிரியில் கடைசி கதவணை வரை சென்று பூம்புகார் கடலில் கலப்பதாகவும் கிளை ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாரி ஏரி குளம் குட்டைகளில் தண்ணீர் சென்றடைந்தால் நிலத்தடி நீர் உயரும் குடிநீர் தட்டுப்பாடு குறையும். 

ஆகையால் அரசு போர்க்கால அடிப்படையில் குடிமராமத்து பணிகளைத் துரிதப்படுத்தி கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் வந்து சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TAGS
விவசாயிகள்

Leave a Reply