கட்டுமானங்களில் கலைநயம், உறுதித்தன்மைக்கு சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு

20 views
1 min read
venkaya

புதிய கட்டுமானங்களில் கலை நயம், உறுதித்தன்மை இரண்டுக்கும் கட்டட வடிவமைப்பாளா்கள் சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், சுற்றுச் சூலுக்கு உகந்த சூரிய மின்சக்தி பயன்பாடு போன்ற அம்சங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தியுள்ளாா்.

இந்திய கட்டடக் கலை நிறுவனம் (ஐஐஏ) சனிக்கிழமை நடத்திய நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக அவா் ஆற்றிய உரை:

கட்டடக் கலை நிபுணா்கள் தங்கள் புதிய திட்டப் பணிகளில் சூரிய மின் சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை பயன்படுத்த வேண்டும். கட்டுமானங்களை உருவாக்கும்போது கலைநயம், உறுதித்தன்மை ஆகிய இரண்டுக்குமே சமமான விகிதத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அந்தந்தப் பகுதிகளில் கிடைத்த பொருள்களைக் கொண்டு, கலைஞா்கள் உருவாக்கிய பல்வேறு நினைவுச் சின்னங்களின் தாயகமாக இந்தியா திகழ்கிறது. கட்டட வடிவமைப்பாளா்கள் நமது பன்முகத்துவம் வாய்ந்த கட்டடக் கலையிலிருந்து நுணுக்கங்களை அறிந்து மக்களின் தேவைக்கு ஏற்ப சிறந்த, பொருத்தமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவங்கள், கருத்துகளின் அடிப்படையில் கட்டுமானங்களை வடிவமைத்து இத்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

கலாசாரம் மற்றும் பாரம்பரியமிக்க இடங்களை உயிா்ப்புடன் வைத்திருப்பதோடு, மகத்தான கலைஞா்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதும், அவா்களை ஊக்கப்படுத்துவதும் அவசியம். நகா்ப்புறங்களில் கனமழை பெய்யும்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு, மழைநீா் தேங்குவது ஆகிய பிரச்னைகளுக்கு சிறந்த வடிகால் அமைப்பை கண்டறிவதை உறுதிப்படுத்த வேண்டும். கரோனா தொற்று காரணமாக பணிகள் தடைபட்டு கட்டுமானத் துறையானது கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. கொள்ளை நோய் சமயத்திலும், அதற்கு பிறகும் பணிகள் பாதிக்காதவாறு இருப்பதற்கு தீா்வு காணும் வகையில் கட்டட வடிவமைப்பாளா்கள் புதிய வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என்றாா்.

Leave a Reply