கனமழை: ஜம்போடை ஏரி கரையில் உடைப்பு

16 views
1 min read
jambodai

உடைந்த ஜம்போடை ஏரி

 

மழை காரணமாக ஜம்போடை ஏரிக்கு வரும் நீரின்  அளவு  அதிகரித்ததைத் தொடர்ந்து, ஏரியின் கரையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், செல்வழிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஜம்போடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டிலுள்ள ஏரி உள்ளது. இந்த ஏரிநீரை பயன்படுத்தி அப்பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக ஶ்ரீபெரும்புதூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்  தொடர் மழையின் காரணமாக  ஜம்போடை  ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, ஏரி கரையின் ஒருபகுதியில், வெள்ளிக்கிழமை மாலை  திடீரென உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வெளியேறியது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கரையில் ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கரையில் ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்ய முடியாததால் தொடர்ந்து வெள்ளநீர் வெளியேறி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது ஜம்போடை ஏரி கரையில் உடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மணல் மூட்டைகள் கொண்டு தற்காலிகமாக உடைப்பு சரிசெய்யப்பட்டது.

இதையடுத்து கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஶ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்குப் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் முன்பு ஏற்பட்ட அதே இடத்தில் தற்போது உடைப்பு ஏற்பட்டு மழைநீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே ஏரிக் கரையில் ஏற்பட்ட உடைப்பை நிரந்தரமாகச் சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

TAGS
rain

Leave a Reply