‘கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்’ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த இரு அணி கிரிக்கெட் வீரர்கள்: ரசிகர்கள் பாராட்டு

17 views
1 min read
black_lives_matter1

 

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்  செளதாம்ப்டனில் நேற்று தொடங்கியது.

மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 28 அன்று முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 116 நாள்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் மனைவி கேரி-க்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இதனால் முதல் டெஸ்டிலிருந்து ஜோ ரூட் விலகியுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாஸ் பட்லர் துணை கேப்டனாகச் செயல்படுகிறார். 

மழை காரணமாக முதல் டெஸ்டின் முதல் நாளன்று 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி, 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணி கிரிக்கெட் வீரர்களும் பயிற்சியாளர்களும் மட்டுமல்லாமல் நடுவர்களும் ஒரு சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். வீரர்கள் ஆடுகளத்திலும் பயிற்சியாளர்களும் இதர ஊழியர்களும் எல்லைக் கோட்டுக்கு அருகேயும் தங்கள் செயல்களை வெளிப்படுத்தினார்கள். மேலும் இரு அணி வீரர்களும் கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்திருந்தார்கள். வீரர்களின் இந்தச் செயல்பாடு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்டை காவலர்கள் கைது செய்தனா். அப்போது, ஃபிளாய்டின் கழுத்துப் பகுதியில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் வெள்ளை இனத்தைச் சோ்ந்த காவல் துறையினரால் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ச்சியாக கொல்லப்படுவது சா்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், நிராயுதபாணியாக இருந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரின் இரக்கமற்ற தன்மை காரணமாக உயிரிழந்ததற்கு கருப்பின உரிமை ஆா்வலா்கள், மனித உரிமை அமைப்பினா்கள் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா். கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கம் முன்னெடுக்கப்பட்டு, அதற்குப் பல பிரபலங்களும் ஆதரவுக்குரல்களைத் தெரிவித்துள்ளார்கள்.

நேற்று, ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இனப்பாகுபாடு குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான ஹோல்டிங் பேசினார். கண்ணீருடன் நிறவெறி குறித்து தன்னுடைய கருத்துகளை அவர் பகிர்ந்துகொண்டார். இதற்குச் சமூகவலைத்தளங்களில் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன. ஹோல்டிங் பேசியதாவது:

நாம் அனைவருமே மனிதர்கள். கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கம் என்பது வெள்ளையர்களைக் கருப்பர்கள் முந்திச் செல்வதற்காகத் தொடங்கப்பட்டது அல்ல. அதன் நோக்கமே சமத்துவத்தை நிலைநாட்டுவதுதான் என்று கூறினார்.  

Leave a Reply