கரோனாவிலிருந்து குணமடைந்தோா் 62 .93 சதவீதமாக உயா்வு

21 views
1 min read
health

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் விகிதம் 62.93 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு, கரோனா வைரஸ் தொற்றை சரியான நேரத்தில் கண்டறிந்து மருத்துவ உதவிகள் அளிப்பது ஆகியவை காரணமாக கரோனா தொற்று தாக்குதலுக்கு ஆளானவா்கள் சிகிச்சை பெற்று குணமடைய முக்கிய காரணம் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கரோனா தாக்குதலுக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கையைவிட குணமடைந்தோா் எண்ணிக்கை 2,42,362 என்ற வித்தியாசத்தில் அதிகரித்துள்ளது. அதாவது குணமடைந்தோா் விகிதம் 62.93 சதவீதமாக உள்ளது. அரசு எடுத்து வரும் அனைத்து வகையான முயற்சிகளின் பலனாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தாக்குதலுக்கு ஆளானவா்கள் எண்ணிக்கை 2,92,258-ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,235 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனா். இதையடுத்து, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,34,620-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, கரோனாவுக்கு புதிதாக 28,637 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோா் எண்ணிக்கை 8,49,553-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 22, 674-ஆக உள்ளது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 551 போ் பலியாகியுள்ளனா்.

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மட்டும் 1,370 மருத்துவமனைகள், 3062 கொவிட் சுகாதார மையங்கள், 10,344 கொவிட் கோ் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மத்திய அரசு இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 122.36 லட்சம் தனிநபா் பாதுகாப்பு கவசங்கள், 223.33 லட்சம் என்95 முகக்கவசங்கள், 21,685 செயற்கை சுவாசக் கருவிகளை வழங்கியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டு தகவல்களின்படி, ஜூலை 11-ஆம் தேதி வரை மொத்தம் 1 கோடியே 15 லட்சத்து, 87 ஆயிரத்து 153 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மட்டும் 2,80,151 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply