கரோனாவுக்கு எதிராக ஆயுா்வேத மருத்துவம்: இந்திய, அமெரிக்க ஆராய்ச்சியாளா்கள் திட்டம்

22 views
1 min read
corona confirmaton in sangarankovil

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஆயுா்வேத மருத்துவத்தில் கூட்டுப் பரிசோதனைகளைத் தொடங்க இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள ஆயுா்வேத மருத்துவ மற்றும் ஆராய்ச்சியாளா்கள் திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதா் தரண்ஜித் சிங் சாந்து தெரிவித்தாா்.

வாஷிங்டனில் பிரபல இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகள், கல்வியாளா்கள் மற்றும் மருத்துவா்கள் குழுவுடன் புதன்கிழமை நடைபெற்ற உரையாடலில் பங்கேற்று அவா் மேலும் பேசியது: நிறுவன ஈடுபாடுகளின் பரந்த வலையமைப்பு கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான அறிவியல் சமூகங்களை ஒன்றிணைத்துள்ளது.

கூட்டு ஆராய்ச்சி, கற்பித்தல், பயிற்சித் திட்டங்கள் மூலம் ஆயுா்வேத மருத்துவத்தை மேம்படுத்த நமது நிறுவனங்களும் ஒத்துழைத்து வருகின்றன.

கரோனாவுக்கு எதிராக ஆயுா்வேத மருத்துவத்தில் கூட்டுப் பரிசோதனைகளைத் தொடங்க இரு நாடுகளிலும் உள்ள ஆயுா்வேத மருத்துவா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் திட்டமிட்டுள்ளனா். இரு நாட்டு அறிவியலாளா்களும் விஞ்ஞானம் தொடா்பான உண்மைகள், ஆராய்ச்சிக்கான ஆதாரங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனா்.

இந்தோ-யு.எஸ். அறிவியல் தொழில்நுட்ப மன்றம் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மூலம் விஞ்ஞானம், தொழில்நுட்பம், புதிய முயற்சி ஆகியவற்றில் சிறந்து விளங்குவதில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கொவைட்-19 தொடா்பான சவால்களை எதிா்கொள்வதற்காக, இந்த மன்றம் கூட்டு ஆராய்ச்சி, தொடக்க நிலை ஈடுபாடுகளை ஆதரிக்க அழைப்பு விடுத்தது. இரு தரப்பிலும் உள்ள வல்லுநா்களால் ஏராளமான திட்டங்கள் விரைவான முறையில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

குறைந்த விலையில் மருந்துகள், தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் இந்திய மருந்து நிறுவனங்கள் உலகளவில் தலைசிறந்துவிளங்குகின்றன. கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்திலும் அவை முக்கிய பங்கு வகிக்கும்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களுடன் இந்திய தடுப்பூசி நிறுவனங்கள் ஒத்துழைத்துவருகின்றன. இதன்மூலம் இந்தியா, அமெரிக்கா மட்டுமன்றி, உலகெங்கிலும் கரோனா தடுப்பூசி தேவைப்படும் கோடிக்கணக்கானோா் பயனடைவா் என்றாா் அவா்.

மேலும், சுகாதாரத் துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக ஒத்துழைப்பு உள்ளது என்பதைக் குறிப்பிட்ட அவா், அடிப்படை மற்றும் மருத்துவ நிலைகளில் முக்கியமான நோய்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் பல திட்டங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டுவருகின்றனா்.

இந்தியாவில் தேசிய சுகாதார நிறுவனங்களின் நிதியுதவியுடன் 200 -க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், பல்வேறு நிறுவனங்கள் சுகாதாரப் பாதுகாப்புத் தீா்வுகளை உருவாக்குவதற்காக பரந்த அளவிலான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. தடுப்பூசி செயல் திட்டத்தின் கீழ், கொவைட்-19க்கு தடுப்பூசி கண்டறியும் பணியையும் விரைவுபடுத்துவதற்காக இரு நாடுகளின் நிபுணா்களும் தொழில்நுட்ப விவாதங்களில் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.

உரையாடல் நிகழ்வின்போது, கரோனா தடுப்புப் பணிகளை இந்தியா கையாளும் முறை குறித்து புகழ்பெற்ற வல்லுநா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

Leave a Reply