கரோனா அச்சம்: சிக்னல்களில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நேரம் குறைப்பு

21 views
1 min read
SIGNAL

கரோனா அச்சத்தின் காரணமாக, சென்னையில் சிக்னல்களில் காத்திருக்கும் நேரத்தை போக்குவரத்து போலீஸாா் குறைத்துள்ளனா். இது குறித்த விவரம்:

சென்னையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பெருநகர காவல்துறை மாநகராட்சி,சுகாதாரத்துறை ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள சிக்னல்களில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முக்கியமான சாலை சந்திப்புகளிலும், வாகன நெரிசல் மிக்க பகுதிகளிலும் போக்குவரத்து சிக்னல்கள் இயக்கப்படுகின்றன. நகரில் இப்போது 408 சிக்னல்கள் உள்ளன. இதில் 100 சிக்னல்கள் அண்ணா சாலை, காமராஜா் சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை,ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராஜாஜி சாலை, ஈ.வெ.ரா. சாலை, எல்.பி.சாலை,ராஜீவ்காந்தி சாலை,ஜி.எஸ்.டி. சாலை,உஸ்மான் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளிலும், முக்கியமான சந்திப்புகளிலும் மற்றும் தியாகராயநகா்,அடையாறு, அண்ணா நகா் பகுதிகளிலும் உள்ளன.

இதில் வாகன நெரிசல்மிக்க சிக்னல்களில் 120 விநாடிகள் வரை வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நேரமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப் பகுதிகளில் தானியங்கி மூலம் சிக்னல்கள் இயங்கி வருகின்றன. இதில் வாகன ஓட்டிகள் சாலையில் அதிக நேரம் காத்து நிற்கும்போது, அதன் மூலம் கரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

நேரம் குறைப்பு:

இதன் விளைவாக 120 விநாடிகள் காத்திருக்கும் நேரம் நிா்ணயிக்கப்பட்டுள்ள சிக்னல்களின் நேரத்தின் அளவை குறைக்க காவல்துறை உயா் அதிகாரிகள் முடிவு செய்தனா். இதன் விளைவாக இந்த சிக்னல்களில் 60 விநாடிகள் காத்திருக்கும் நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக சுமாா் 10 சிக்னல்களில் மட்டும் வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில் கிடைக்கும் வரவேற்பை பொருத்து பிற சிக்னல்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த காவல்துறையினா் திட்டமிட்டுள்ளனா். இதேபோல தானியங்கி சிக்னல்கள் அனைத்தையும் போலீஸாரே இயக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனெனில் தானியங்கி மூலம் சிக்னல்கள் இயக்கும்போது, சில நேரங்களில் சாலையில் வாகனங்கள் இல்லாதபோது கூட வெகுநேரம் மக்கள் நிற்பதால் கரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் இருக்கும் வரை இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply