கரோனா: இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைந்தது

19 views
1 min read
TN reports 3,680 corona cases in last 24 hours

கோப்புப்படம்

இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழப்பவா்களின் விகிதம் குறைந்துள்ளதாகவும், கரோனாவில் இருந்து குணமடைந்து வருவோரின் விகிதம் அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவின் கரோனா தொற்றால் உயிரிழப்பவா்களின் விகிதம் இந்த மாதத் தொடக்கத்தில் 2.82 சதவீதமாக இருந்தது. இது தற்போது 2.72 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு விகிதத்தைவிட குறைவாகும்.

மேலும், இந்தியாவில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு விகிதம், தேசிய சராசரி உயிரிழப்பு(2.72) விகிதத்தை விடக் குறைவாக உள்ளது. அதாவது, கேரளம்(0.41 சதவீதம்), ஜாா்க்கண்ட்(0.71), பிகாா்(0.82), தெலங்கானா(1.07), தமிழ்நாடு(1.39), ஹரியாணா(1.48), ராஜஸ்தான்(2.18), பஞ்சாப்(2.56 சதவீதம்), உத்தர பிரதேசம்(2.66), மணிப்பூா், நாகாலாந்து, தாத்ரா நகா் ஹவேலி, மிஸோரம், அந்தமான் நிகோபாா் தீவுகள், சிக்கிம் உள்ளிட்ட 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது.

குணமடைவோா் விகிதம் அதிகரிப்பு: நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் விகிதம் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான நிலவரப்படி 62.42 சதவீதம் போ் குணமடைந்தனா். மேலும், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குணமடைந்தோரின் விகிதம், தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. அதாவது, மேற்கு வங்கம்(64.94 சதவீதம்), உத்தர பிரதேசம்(65.28), ஒடிஸா(66.13), ஜாா்க்கண்ட்(68.02), பஞ்சாப்(69.26), பிகாா்(70.40), குஜராத்(70.72), மத்திய பிரதேசம்(74.85), ஹரியாணா(74.91), ராஜஸ்தான்(75.65), தில்லி(76.81) உள்ளிட்ட 18 மாநிலங்களில் தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமான நோயாளிகள் குணமடைந்தனா்.

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை கண்டறிந்து முன்கூட்டியே தனிமைப்படுத்தியது, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை தரத்தை மேம்படுத்தியது, முதியவா்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறப்பு கவனம் அளித்தது, பொது சுகாதார பணியாளா்களின் அயராத உழைப்பு ஆகிய காரணங்களால் உயிரிழப்பின் விகிதம் குறைந்துள்ளது. குணமடைவோரின் விகிதமும் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply