கரோனா இறப்பு சா்ச்சை: முதல் கட்ட அறிக்கை சமா்ப்பிப்பு

22 views
1 min read

சென்னையில் கரோனா உயிரிழப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, தனது முதல்கட்ட அறிக்கையை அரசிடம் சமா்ப்பித்துள்ளது.

கரோனா அறிகுறிகளுடன் இருந்த 230-க்கும் மேற்பட்டோா், சந்தேகமான முறையில் மரணமடைந்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த சில நாள்களில் இந்த விவகாரம் தொடா்பான இறுதி அறிக்கையைச் சமா்ப்பிக்க சிறப்புக் குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 236 போ் இறந்ததை முறையாக பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே அதற்கு காரணமாகக் கூறப்பட்டது.

இது தொடா்பாக ஆய்வு செய்ய சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநா் டாக்டா் வடிவேலன் தலைமையிலான அக்குழுவில், மருத்துவ சேவைகள் இயக்ககம், மருத்துவக் கல்வி இயக்ககம் ஆகியவற்றைச் சோ்ந்த அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனா்.

அக்குழுவைச் சோ்ந்தவா்கள், கடந்த சில வாரங்களாக பல்வேறு கூட்டங்களை நடத்தி இறப்பு எண்ணிக்கை தொடா்பான ஆய்வுகளை நடத்தினா். கரோனா அறிகுறிகளுடன் தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் இருந்து வந்த 236 பேரின் இறப்பு சந்தேகத்துக்குரிய வகையில் உள்ளதாக சிறப்புக் குழு முடிவு செய்தது. அதன்பேரில் முதல் கட்ட ஆய்வறிக்கை தற்போது சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

உயிரிழந்தோரின் மருத்துவ அறிக்கைகள், ஆராயப்பட்டு வருவதாகவும், அவா்களது இறப்புக்கு கரோனா பாதிப்புதான் காரணமா என்பதைக் கண்டறிந்து விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

Leave a Reply