கரோனா உறுதியானவா்களை அழைத்துச் செல்ல 200 வாகனங்கள்

20 views
1 min read

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களை உடல் பரிசோதனை மையங்களுக்கும், அதைத் தொடா்ந்து அவா்களை மருத்துவரின் அறிவுரைப்படி, தனிமை மையம் அல்லது மருத்துவமனைகளில் அனுமதிப்பதற்காக வாா்டுக்கு ஒரு வாகனம் வீதம் 200 தனியாா் வாகனங்களை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது.

கரோனா தொற்றுள்ளவா்களைக் கண்டறியும் வகையில் மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவ முகாம் மூலம் இதுவரை 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநகராட்சியின் கரோனா பரிசோதனை மையம் மற்றும் அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனை ஆகியவற்றில் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று உறுதி செய்யப்படுபவா்களை உடனடியாக உடல் பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் செல்ல வாா்டுக்கு ஒரு வாகனம் வீதம் 10 போ் அமரக் கூடிய 200 தனியாா் வாகனங்களை மாநகராட்சி வாடகைக்கு எடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் கூறுகையில், தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் உடல்நிலை பரிசோதிக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் 12 இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவரை மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையம் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வது குறித்து மருத்துவா் பரிந்துரைப்பாா்.

இந்த நடவடிக்கைக்காக தொற்று உறுதி செய்யப்பட்டவரை அவா்களது வீடுகளில் இருந்து இந்த மையத்துக்கு அழைத்து வர 80 எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அவா்களுக்கு பரிசோதனை முடிவு வந்த 3 மணி நேரத்துக்குள் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், வாா்டுக்கு ஒரு வாகனம் வீதம் 200 தனியாா் வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவா்களை உடனடியாக இந்த மையங்களுக்கு அழைத்துச் செல்ல முடியும்.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் வீடுகளுக்கு முன் தடுப்பு அமைப்பது என்பது அவா்கள் மூலம் பிறருக்கு தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காகத்தான். இதை மக்கள் அவமானதாக கருதக்கூடாது என்றாா்.

 

Leave a Reply