கரோனா சிகிச்சையில் குணமடைவோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம்: ஆர்.காமராஜ்

13 views
1 min read
kamaraj

 

கரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்புபவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு செம்மையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகளால், தமிழகத்தில் நோய்த் தொற்றின் விரீயம் குறைவாக உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 576 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்பொழுது 163 நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 68.22 சதவீதம் ஆகும். குணமடைந்து வீடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு காரணம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்பை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று உறுதி செய்யப்பட்டால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதே ஆகும். எனவே, கரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்புபவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது.

தமிழக முதல்வர் அறிவித்த சிறப்பு வாய்ந்த திட்டம் இ}சஞ்சீவினி என்கிற ஆன்லைன் திட்டம். இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவச் சிகிச்சைகளும், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் வீட்டிலிருந்தபடியே மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறலாம். நமது திருவாரூர் மாவட்டத்திலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை 6 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி முடிய டோக்கன் வழங்கப்பட உள்ளது. ஜூலை}10 ஆம் தேதி முதல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தொடர்புடைய நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்றார்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் முன்னிலை வகித்தார். முன்னதாக, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு மாநில கிளையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கரோனா நிவாரணப் பொருள்களான 100 பெட்சீட், 100 டவல், 100 வாளி ஆகியவற்றை கரோனா வார்டுகளுக்காக இந்தியன் ரெட்கிராஸ் சொûஸட்டி திருவாரூர் மாவட்டக் கிளை சார்பில் அதன் செயலாளர் வரதராஜன், உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜிடம் வழங்கினார்.

Leave a Reply