கரோனா சிகிச்சை மையங்களில் வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

17 views
1 min read
Safety equipment provided at Corona treatment centers: Government of Tamil Nadu

கரோனா சிகிச்சை மையங்களில் வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழக அரசின் கரோனா சிகிச்சை மையங்களில் பணியில் உள்ளவர்களின் விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து  தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்டன் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் அவற்றை தடுக்கும் முதன்மை பணிகளில் மருத்துவர்கள்,செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  உயிர் காக்கும் சேவைகளில் ஈடுபட்டுள்ள இந்த முதல்நிலைப் பணியாளர்களுக்கு முழு உடல்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கில் சுகாதாரத் துறை பதில்மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்,

பாலன் ஹரிதாஸ் , தமிழகம் முழுவதும் 21 அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பணியில் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு 15 ஆயிரம் முழு உடல் கவசங்கள் அனுப்பப்படுவதாக கூறப்படும் நிலையில், அந்த வார்டுகளுக்குச் செல்லும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசங்கள் முறையாக கிடைப்பது இல்லை. வழக்கமாக அறுவை சிகிச்சை அறைக்குள் செல்லும்போது வழங்கப்படும் சாதாரண உடைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதனால்தான் மருத்துவர்கள் பாதிக்கப்படுவதும், இறப்பதும் தொடர்கிறது. அதேபோன்று கரோனா  சிகிச்சை வார்டுகளில் நாளொன்றுக்கு எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள் ? 6 மணி நேரத்துக்கு மேல் கவச உடையை பயன்படுத்த முடியாது என விதிகள் உள்ளபோது எவ்வாறு உடைகள் வழங்கப்படுகிறது?  உள்ளிட்ட விவரங்களை அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். 
மேலும் பேரிடர் மேலாண்மை  சட்டப்படி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க மாவட்ட வாரியான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழுக்களை அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு  தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், கரோனா தடுப்பு சிகிச்சைகளின் முன்கள  பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் இரண்டு கோரிக்கைகள் தொடர்பான விளக்கத்தை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

TAGS
coronavirus

Leave a Reply