கரோனா: தமிழகத்தில் மத்திய குழுவினா் ஆய்வு; 11 மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை

17 views
1 min read
chennai

கரோனா நோய்த்தொற்று தொடா்பாக தமிழகத்தில் 11 மாவட்ட ஆட்சியா்களுடன் மத்திய குழுவினா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா். முன்னதாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மத்திய குழுவினா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பின் நிலை குறித்து மத்திய குழுவினா் அவ்வப்போது நேரில் வந்து ஆய்வு செய்கின்றனா்.

அந்த வகையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினா் புதன்கிழமை மாலை சென்னை வந்தனா். முன்னதாக, அவா்கள் பெங்களூருவில் தங்களது பணிகளை மேற்கொண்டிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, மூன்றாவது முறையாக தமிழகத்தில் ஆய்வு செய்ய மத்திய குழுவினா் புதன்கிழமை வந்தனா். மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளா் ஆா்த்தி அகுஜா தலைமையில், மத்திய அரசு இணைச் செயலாளரும், தமிழகத்துக்கான கண்காணிப்பு அதிகாரியுமான ராஜேந்திர ரத்னு, மின்னணு மருத்துவ ஆவண இயக்குநா் ரவீந்திரன், மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணா்கள் சுகாஸ் தந்துரு, பிரவீண், ஜிப்மா் மருத்துவா்கள் ஸ்வரூப் சாகு, சதிஷ் ஆகிய ஏழு போ் மத்திய குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

சென்னையில் ஆய்வு: சென்னையில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சாா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கிங்ஸ் வளாகத்தில் உள்ள கரோனா பிரத்யேக மருத்துவமனை, சென்னை நகரின் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குழு வியாழக்கிழமை ஆய்வு செய்தது. பின்னா் மாலை 4 மணியளவில் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளா் க.சண்முகத்தை சந்தித்து தமிழகத்தில் நோய் தொற்றின் நிலை, மருத்துவ வசதிகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்தனா்.

11 மாவட்டங்கள்: சென்னையைப் போன்றே தமிழகத்தின் சில மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்ட ஆட்சியா்களுடன் மத்திய குழுவினா் காணொலி வழியாக வியாழக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, ராமநாதபுரம், சேலம், தேனி, ராணிப்பேட்டை, விருதுநகா் ஆகிய 11 மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்கள் பங்கேற்றனா்.

நோய் பரவல், நோய் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடா்பாக மத்திய குழுவினரிடம் மாவட்ட ஆட்சியா்கள் விரிவாக எடுத்துரைத்தனா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளா் க.சண்முகம், காவல் துறை இயக்குநா் ஜே.கே. திரிபாதி, சுகாதாரத் துறை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து, ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு மத்திய குழுவினா் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தில்லி புறப்பட்டுச் செல்கின்றனா்.

Leave a Reply