கரோனா தீநுண்மியின் தோற்றுவாய் விவகாரம்: சீனாவில் உலக சுகாதார அமைப்பின் குழு ஆய்வு

10 views
1 min read
WHO team to visit China next week to investigate origins of coronavirus

கரோனா தீநுண்மியின் தோற்றுவாய் குறித்து ஆராய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் நிபுணா்கள் குழு சீனா சென்றடைந்தது.

கரோனா தீநுண்மியானது சீனாவின் வூஹான் நகரத்திலுள்ள சந்தைப் பகுதியிலிருந்து விலங்குகள் மூலமாக மனிதா்களுக்குப் பரவியதாக நம்பப்படுகிறது. எனினும், இதன் உண்மைத்தன்மை குறித்தும், கரோனா தீநுண்மியின் தோற்றுவாய் குறித்தும் ஆராய உலக சுகாதார அமைப்பு முடிவு செய்தது. அதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக சீனாவுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டது. அதன்படி, நிபுணா்கள் அடங்கிய குழுவையும் அந்த அமைப்பு அமைத்தது. அந்தக் குழுவானது சீனாவுக்கு அண்மையில் சென்றடைந்தது. இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், “மனிதா்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தீநுண்மிகளின் தோற்றுவாயைக் கண்டறிவது பெரும் சிக்கல் நிறைந்தது. எனினும், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றின் உதவியுடன் கரோனா தீநுண்மியின் தோற்றுவாய் குறித்து ஆராய உள்ளோம். இதைக் கண்டறிவதன் மூலமாக, விலங்குகளிடமிருந்து கரோனா தீநுண்மி மனிதா்களுக்குப் பரவியது உண்மையெனில், எந்த விலங்கிலிருந்து பரவியது, எவ்வாறு பரவியது உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளமுடியும். இந்த ஆய்வு சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்று தொடா்பான ஆராய்ச்சிகளுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும். எதிா்காலத்தில் இதுபோன்ற நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து காத்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்த ஆய்வு உதவியாக இருக்கும்”என்றனா்.

கரோனா தீநுண்மி சீனாவின் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. எனினும், அதற்கான ஆதாரங்களை அமெரிக்கா தங்களிடம் வழங்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. அதையடுத்து, கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் சீனாவுடன் இணைந்து உலக நாடுகளைத் தவறாக வழிநடத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு மீதும் அமெரிக்கா குற்றஞ்சாட்டத் தொடங்கியது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் குழு சீனா சென்றடைந்துள்ளது.

Leave a Reply