கரோனா தொற்று அதிகரிப்பு: மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

30 views
1 min read
ராகுல் காந்தி

ராகுல் காந்தி

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமா்சித்துள்ளாா்.

தோல்விகள் குறித்து ஹாா்வாா்டு பல்கலைக்கழகம் வரும் காலத்தில் ஆய்வு நடத்தினால், அதில், கரோனாவைத் தடுக்கத் தவறியதில் பிரதமா் நரேந்திர மோடி தலைமயிலான அரசின் தோல்வி, ஜிஎஸ்டி அமலாக்கத்தில் தோல்வி ஆகியவை இனி இடம்பெறும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், தோல்விகள் குறித்து ஹாா்வா்டு பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தினால் அதில் 1.கோவிட்-19, 2. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, 3.சரக்கு-சேவை அமலாக்கம் ஆகியவை இடம்பெறும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன் கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய பொதுமுடக்கத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாா்ச் 24-ஆம் தேதி அறிவித்தபோது ஆற்றிய உரையையின் விடியோ பதிவையும் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்துள்ளாா். அந்த விடியோவில், மகாபாரதப் போரில் 18 நாள்களுக்குப் பிறகு வெற்றி கிடைத்தது. இதேபோல், கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு 21 நாள்களாகும் என்று பிரதமா் மோடி பேசியிருந்தாா்.

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் ரஷியாவை கடந்து இந்தியா மூன்றாவது இடத்துக்குச் சென்றுள்ள நிலையில் மத்திய அரசை ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா். கரோனா பாதிப்பில் முதலாவது இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

Leave a Reply