கரோனா தொற்று: சேந்தமங்கலத்திற்குள் நுழைய தடை விதிப்பு

17 views
1 min read
இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ள சேந்தமங்கலம்- காளப்பநாயக்கன்பட்டி சாலை.

இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ள சேந்தமங்கலம்- காளப்பநாயக்கன்பட்டி சாலை.

நாமக்கல்: சேந்தமங்கலம்,  காளப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் வெளியாள்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 147 பேர் கரோனா பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். இவர்களில் குணமடைந்தவர்கள் தவிர்த்து, 55 பேர்  நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனா தொற்று பட்டியலில், காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 45 வயது பெண், சேந்தமங்கலத்தை சேர்ந்த 38 வயது பெண், 38 வயது ஆண், சேந்தமங்கலம் வட்டத்தைச் சேர்ந்த குப்பநாயக்கனூரைச் சேர்ந்த 40 வயது பெண், பச்சுடையாம்பட்டியைச் சேர்ந்த 43 வயது பெண்,  மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண், 26 வயது பெண், எம். வாழவந்தியை சேர்ந்த 28 வயது ஆண், முத்துக்கப்பாட்டியைச் சேர்ந்த 37 வயது பெண், ஏ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 35 வயது பெண், வாழவந்தியைச் சேர்ந்த 26 வயது பெண், பாண்டமங்கலத்தை சேர்ந்த 32 வயதுடைய பெண், வெங்கரையை சேர்ந்த 30 வயது பெண் ஆகிய 13 பேர் கரூரில் உள்ள ஆசியன் நூற்பாலையில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். 

இவர்கள் தவிர, சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ராசிபுரத்தை சேர்ந்த 31 வயது  தூய்மை பணியாளர்,  திருச்செங்கோட்டைச் சேர்ந்த 13 வயது சிறுவன், பள்ளிக்காடு பகுதியை சேர்ந்த 25 வயது ஆண், சித்தாளந்தூரைச் சேர்ந்த 22 வயது ஆண் உள்ளிட்ட 4 பேரை சேர்த்து மொத்தம் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நாமக்கல், சேலம், திருச்செங்கோடு  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 147-ஆக உயர்ந்துள்ளது. 

சேந்தமங்கலம் வட்டத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனால் கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு சேந்தமங்கலத்தின் முக்கிய சாலைகள், வீதிகள் ஆகியவை இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன. நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆங்காங்கே கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கும் பணி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply